உள்ளூர் செய்திகள்

ஒரே ஆண்டில் 417 காப்புரிமைகள் பதிவு செய்து சாதனை

சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து 2024-25 நிதியாண்டில் மொத்தம் 417 காப்புரிமைகள் பதிவு செய்துள்ளனர். இது இயக்குநர் பேராசிரியர் காமகொடி அவர்கள் முன்வைத்த ஒரு நாளுக்கு ஒரு காப்புரிமை என்ற இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதில் 298 இந்திய காப்புரிமைகள் மற்றும் 119 சர்வதேச காப்புரிமைகள் அடங்கும்.கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐஐடி மதராஸ் ரூ. 28 கோடி மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உரிமம் ஒப்பந்தங்கள் மூலம், பல்வேறு தொடக்க நிறுவனங்கள், எம்எஸ்எம்இ மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உயர் தாக்கம் வாய்ந்த கண்டுபிடிப்புகளை மாற்றியுள்ளது. இதில், 5ஜி ரான் துணை அமைப்பு தொழில்நுட்பம், டாடா குழுமத்தின் தேஜஸ் நெட்வொர்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.உலக அறிவுசார் சொத்து உரிமை நாள் ஏப்ரல் 26 அன்று கொண்டாடப்படவுள்ளது. இது புத்தாக்கங்களை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் நாளாகும்.இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில், 2047-இல் விக்சித் பாரத் நோக்கி நாம் பயணிக்கும் இந்த காலப்பகுதியில், இந்தியா ஒரு தொழில்நுட்ப சூப்பர்பவராக மாற, நமது அறிவுசார் சொத்துக்களை பாதுகாப்பது மிக முக்கியம். 2024-25 நிதியாண்டில் ஐஐடி மதராஸ் குழுவினர் 417 காப்புரிமைகள் பதிவு செய்துள்ளனர் என்பதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன், என்றார்.பேராசிரியர் பிரபு ராஜகோபால் கூறுகையில், இந்தியா முழுவதும் டீப்-டெக் புதுமைகளுக்கான மையமாக விளங்கும் சென்னை ஐஐடி, அறிவுசார் சொத்துக்களை ஆதரித்தும், ஆழமான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட தொடக்க நிறுவனங்களை ஊக்குவித்தும் பல துறைகளில், விண்வெளி முதல் குவாண்டம் வரை புதுமைகளை உருவாக்கி வருகிறது. இதற்கான ஊக்குவிப்பு, புதுமை மற்றும் தொழில்தொடக்கம் அலுவலகம், மற்றும் சென்னை ஐஐடி இன்குபேஷன் மையம் போன்ற அமைப்புகள் மூலம் நடைபெற்று வருகிறது, என்றார்.கட்டமைப்பு மற்றும் செயல்முறைபுதுமையை ஊக்குவித்து, அறிவுசார் சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கில், ஐஐடி மதராஸ் ஒரு தெளிவான மற்றும் திறம்பட செயல்படும் காப்புரிமை பதிவு நடைமுறையை செயல்படுத்தியுள்ளது.இந்த நிறுவனம், ஐசிஎஸ்ஆர் வழியாக, அறிவுசார் உரிமைகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதற்காக ஒரு சிறப்பான சட்ட பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செயல்முறை, கண்டுபிடிப்பாளர்கள் தங்களின் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தல் படிவம் (ஐடிஎப்)-ஐ ஐசிஎஸ்ஆர்-இன் அறிவுசார் சொத்து மேலாண்மை பிரிவுக்கு (ஐபிஎம் செல்) சமர்ப்பிப்பதன் மூலம் தொடங்குகிறது.மேலும், ஐபிஎம் செல் பல ஆராய்ச்சி குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றி, அவர்களது கண்டுபிடிப்புகள் மற்றும் மாதிரிகளை பரிசீலனை செய்து வருகிறது. இதன் விளைவாக, வடிவமைப்பு பதிவு எண்ணிக்கைகளில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்