தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில், நகர மற்றும் ஊரக பகுதிகளில் கழிவுநீர் கலந்த சுகாதாரமற்ற குடிநீர் பருகியதால், வாந்தி, பேதி ஏற்பட்டு, 20 நாட்களில், ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்; நுாற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதும், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததும் தான் பாதிப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.எதிர்பார்ப்புமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.பருவமழை காலங்களில், மழைநீரில் கழிவுநீர் கலந்து, அப்படியே நீர்நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் கலப்பதால், அதை பருகும் மக்கள் குடிநீரால் ஏற்படும் தொற்றுக்கு ஆளாவது வழக்கம். இதனால் மழைக்காலங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு பரவலாக காணப்படும்.அரசு நிர்வாகமும் மழைக்காலம் துவங்கினாலே, சுகாதார துறை வாயிலாக குடிநீரை காய்ச்சி குடிக்கவும், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் குளோரின் கலந்த குடிநீர் வினியோகமும் செய்யப்படுவது வழக்கம்.ஆனால், கடந்த மாதம் கோடை வெயில் கொளுத்திய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீரால் தொற்று ஏற்பட்டு, மக்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த பாதிப்பிற்கு கடந்த 20 நாட்களில், வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்; நுாற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்த விபரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூரில் குடிநீர் தொற்றால் கிராமத்தில் பலரும் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். இதில், இரு மூதாட்டிகள் இறந்தனர்; 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் ஓசூர் மாநகராட்சி, 4வது வார்டு, சின்ன எலசகிரி அம்பேத்கர் நகர், சின்ன பழனியப்பா நகர், அண்ணா நகர் பகுதிகள் அருகருகே உள்ளன. அப்பகுதியை சேர்ந்த, 75க்கும் மேற்பட்டோர், மூன்று நாட்களாக வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் திருச்சி, தாராநல்லுார், கலைஞர் தெருவில், 20 நாட்களாக, குடிநீர் மாசு கலந்து துர்நாற்றத்துடன் வினியோகிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியினர் மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பலரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட பாண்டி மீனா, 33, கடந்த, 14ல் உயிரிழந்தார். மூதாட்டி உட்பட சிலர் மருத்துவமனையில் உள்ளனர் ஈரோடு மாவட்டம், தாளவாடி ஒன்றியம், தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் தடசலட்டி, இட்டரை, மாவநத்தம் கிராம மக்கள் குடிநீர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள பழங்குடியின மக்கள், கடந்த மே முதல், வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாகினர். மே 25ல், மூன்று பேர்; ஜூன் 5ல் ஒருவர், ஜூன், 7ல் இருவர் என, ஆறு பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.அசுத்தமாகிய நீர்அப்பகுதியில் தண்ணீர் மாதிரி பரிசோதனையில் குட்டைகளில் தேங்கி இருந்த நீர் அசுத்தமாகி இருந்ததும், அதை குடித்ததால் அக்கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்ததும் தெரியவந்துள்ளது.இதுபோன்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அந்தந்த மாவட்ட சுகாதார துறையினர் முகாம் அமைத்து, பாதிப்பு அதிகரிக்காத வகையில் மருத்துவ முகாம் அமைத்து வருகின்றனர். கோடையில் குடிநீர் தொற்று ஏற்பட்டது குறித்து அதிகாரிகள், நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதில், பெரும்பாலான பகுதிகளில், குடிநீர் குழாய்களில் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கலந்ததால் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.ஊரக பகுதிகளில் பெரும்பாலும் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்களால் இந்த பிரச்னை ஏற்படுவதாக தெரிகிறது.இது குறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறியதாவது:தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், 20 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்கள் வழியே தான் தற்போது வரை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. துருபிடித்த குழாய்கள் வழியே செல்லும் தண்ணீர், சாக்கடை கால்வாயின் அடிப்பகுதியில் உள்ள குழாய்களில் செல்லும் தண்ணீரை அருந்தும் மக்களுக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம், வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. பழைய குடிநீர் குழாய் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. குழாய்களை மாற்றவில்லை. பல ஊராட்சி தலைவர்கள், குடிநீர் பணிகளை சொந்த செலவில் செய்யும் நிலை உள்ளது. இதை, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கண்டுகொள்ளவும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.பயன்பாடில்லைஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு அடியில் பிளாஸ்டிக் குழாய்களும், தண்ணீர் பிடிக்க மட்டும் இரும்பு குழாய்களும் பொருத்தப்பட்டன. அவை பெரும்பாலும் பயன்பாடின்றி உள்ளன. தற்போது இரும்பு குழாய்கள் வெளியே போடப்பட்டுதொடர்ச்சி 14ம் பக்கம்குடிநீர் குழாய் போடப்படுகிறது.குழாய் சீரமைப்புக்கு என, தனியே அரசு நிதி ஒதுக்குவதில்லை. ஊராட்சி மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து அப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் பெரும்பாலான கிராமங்களில் குழாய்கள் பராமரிக்கப்படுவதில்லை.மேல்நிலை தொட்டிகள், ஆண்டுக்கு ஒருமுறை உள்பகுதியில் சுண்ணாம்பு அடித்து, துருப்பிடித்த குழாய்களை மாற்ற வேண்டும். ஆனால், பல ஊராட்சிகளில் தொட்டி சுத்தம், குழாய் மாற்றம் ஆகிய பணிகள் செய்யப்படுவதில்லை. தவிர குடிநீர் தொட்டி மீது மூடியின்றி கிடக்கிறது. சமீபகாலமாக குடிநீர் தொட்டியில், மலம் கலப்பு போன்ற புகார்களும் எழுந்து வருகிறது.மூடி இல்லாத தொட்டியில் காகம், கழுகு போன்றவை இறந்த உயிரினங்களை உட்கொண்டு, தண்ணீருக்குள் போடுவதால் அந்த தண்ணீரை அருந்தும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அளவு மீறி குளோரின் கலக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டாலும் அவை முறைப்படுத்தவில்லை.கடந்த, 2012 - 13ல், அ.தி.மு.க., ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, குடிநீருக்கு பயன்படுத்தும் தொட்டிகளை சுத்தம் செய்து குழாய்களை புதுப்பிக்க உத்தரவிட்டதோடு, அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்தார். பின் தொட்டி, குழாய் சீரமைக்க நிதி ஒதுக்கீடு இல்லை. தொட்டி பராமரிப்பின்றி குடிநீர் வினியோகம் செய்தால் குடிநீர் அருந்துபவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சிக்குன் குனியா, டைப்பாய்டு, காலரா உள்ளிட்ட நோய்கள் வந்தபோது அந்தந்த கிராமங்களில் மருத்துவ குழு முகாமில், முதலில் குடிநீர் தொட்டி சீரமைப்பு, சாக்கடை துார் வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின், அப்பணிகள் பெயரளவுக்கு நடந்தன. தற்போது பணிகள் சுத்தமாக நடப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.குடிநீர் மாசு காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. குடிநீர் மாசு குறித்து விசாரித்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஓசூரில் புது பிரச்னை
ஓசூர் மாநகராட்சி வாயிலாக வினியோகிக்கப்பட்ட குடிநீரில், கழிவுநீர் அல்லது தொழிற்சாலை ரசாயனம் கலந்ததால், மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில், கழிவு நீர் கலந்ததால் அதை பருகிய மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டதாகவும் புகார் உள்ளது.தமிழக எல்லையில் உள்ள ஓசூர் மாநகராட்சி, தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். அந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரிகள், குளம், குட்டைகளில் நேரடியாக கலக்கின்றன. சில நிறுவனங்கள், கழிவுகளை பெரிய அளவில் போர்வெல் அமைத்து அதற்குள் விடுகின்றன. இதனால், நகரில் நிலத்தடி நீர் மாசடைந்து மக்களுக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம், வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.ஓசூர் அருகே பத்தலப்பள்ளி, மோரனப்பள்ளியை சேர்ந்த சிலர் கூட, சில நாட்களுக்கு முன் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் என, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா கூறுகையில், ''ஓசூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'குளோரினேஷன்' செய்து குடிநீர் வழங்கி வருகிறோம். மாநகராட்சியில் மிக பழமையான பைப்லைன் இல்லை. அனைத்து போர்வெல்கள், பைப்லைன்களை சோதனை செய்து வருகிறோம். பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் ஒரு போர்வெல் தண்ணீர் மோசமாக இருந்ததால் வெளியேற்றியுள்ளோம். மற்ற போர்வெல்கள் நல்ல நிலையில் உள்ளன,'' என்றார்.- நமது நிருபர் குழு -