புதுடில்லி: இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் சிலர் புகார்கள் தெரிவித்துள்ள நிலையில், அதில் உண்மை இருந்தால், மறுதேர்வு நடத்த, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடு முழுதும் உள்ள 261 மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கான, க்யூட் நுழைவுத் தேர்வு, மே மாதத்தில் நடத்தப்பட்டது. இதில், 13.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.சில பாடங்களுக்கு நேரடியாகவும், சில பாடங்களுக்கு 'ஆன்லைன்' வாயிலாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் சில பாடங்களில், குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் தேர்வை முடிப்பதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என, மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின், 'நெட்' தேர்வுகளில் மோசடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மே மாதம் நுழைவு தேர்வு நடந்த நிலையில், இளநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தேர்வு எழுத நேரம் போதவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.க்யூட் தேர்வுக்கான 'ஆன்சர் கீ' எனப்படும் விடை மாதிரிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால், முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடை மாதிரிகளின் அடிப்படையில், மாணவர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க, 9ம் தேதி மாலை வரை அவகாசம் வழங்க, என்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. ஏற்கனவே உள்ள புகார்கள் மற்றும் புதிதாக பெறும் புகார்கள் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். அதில், புகார்களில் உண்மைத்தன்மை இருந்தால், வரும் 15 முதல் 19ம் தேதி வரை குறிப்பிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகே, க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, தெரிகிறது.