கடல்நீரை குடிநீராக்கும் 'நெம்மேலி-1' திட்டத்தில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரில், உப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், அதை பயன்படுத்தும் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஓரிரு நாளில் உற்பத்தியை நிறுத்தி பழுது நீக்கிய பின், குடிநீர் வினியோகம் சீராகும் என, வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.சென்னையில் தினமும், 85 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும். தற்போது கோடைக்காலம் என்பதால், தினமும் 106 முதல் 107 கோடி லிட்டர் வரை வினியோகம் செய்யப்படுகிறது.இதில், 104 கோடி லிட்டர், 5,500 கி.மீ., நீள குழாய் இணைப்பு வழியாகவும், 3 கோடி லிட்டர் லாரிகள் வாயிலாகவும் வழங்கப்படுகிறது.இந்த குடிநீர், ஏரிகளில் இருந்து 81.80 கோடி லிட்டரும், விரிவாக்க பகுதி கிணறுகளில் இருந்து, 2 கோடி லிட்டரும், மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களில் இருந்து, 23.3 கோடி லிட்டரும் பெறப்படுகிறது.ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் அம்பத்துார், வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்துார் மற்றும் அடையாறில் ஒரு பகுதி உள்ளிட்ட மண்டலங்களுக்கு வழங்கப்படுகிறது.நெம்மேலி-1 மற்றும் நெம்மேலி-2 ஆகிய திட்டத்தில் இருந்து, கடல்நீரை சுத்திகரித்து பெறப்படும் குடிநீர் சோழிங்கநல்லுார், பெருங்குடி, அடையாறில் ஒரு பகுதி மண்டலங்கள், பெரும்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது.இதில், 570 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட நெம்மேலி-1 திட்டம், தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் கொண்டது. இது, கடந்த 2014ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. நெம்மேலி-2 திட்டத்தில், தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திறனுள்ள, சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி, 1,516.82 கோடி ரூபாயில், கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. பணி முடிந்து, கடந்த பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.இதில், நெம்மேலி-1 திட்டத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீரில், உப்புத் தன்மை அதிகமாக இருக்கிறது. அதாவது, டி.டி.எஸ்., எனப்படும் உப்பு அளவானது, 500க்குள் இருக்க வேண்டிய நிலையில், 1,200 முதல் 1,500 வரை உள்ளது.இதனால் சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிவாசிகள், அதிக உப்புத் தன்மை கொண்ட குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.இந்த பிரச்னை குறித்து, குடிநீர் வாரியத்திற்கு புகார்களும் அனுப்பப்பட்டு உள்ளன.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:நெம்மேலி-1 திட்டத்தில், சுத்திகரிப்பு இயந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்க, வெளிநாட்டில் இருந்து உதிரி பாகங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. ஆனால், உற்பத்தியை நிறுத்தி, பழுதை சரி செய்ய வேண்டும். இதனால், தென்சென்னை பகுதியில் சில நாட்கள், குடிநீர் வினியோகம் தடைபடும். குடிநீர் வினியோகம் தடைபட்டால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதை எதிர்க்கட்சிகள் பிரசாரமாக்கி, ஆளுங்கட்சிக்கு ஓட்டு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இதனால், உப்புத் தன்மையுடன் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஓ.எம்.ஆரில் வீராணம் குழாய் இணைப்பு உள்ளது. பழுது நீக்கும் வரை, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், வீராணம் ஏரி நீரை கலந்து வழங்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.வீராணத்தில் இருந்து குறைந்த அளவு குடிநீர் வருவதால், அதை கலந்து வினியோகிக்கும் முயற்சி கைவிடப்பட்டது.கடந்த பிப்ரவரியில் திறந்த நெம்மேலி-2 திட்டத்தில், குழாய்கள் தனியாக பதித்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில் இருந்து, நெம்மேலி-1 குழாயில் ஒரு இணைப்பு வழங்கி இருந்தால், பிரச்னை இந்த அளவு நீடித்திருக்காது.தற்போது ஓட்டுப்பதிவு முடிந்தும், உப்புத் தன்மையுடன் குடிநீர் வினியோகம் தொடர்கிறது. இதை சரி செய்ய, குடிநீர் வாரியம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:உப்புத் தன்மையை சரி செய்யும்படி புகார்கள் வந்துள்ளன. ஆனால், உடல் உபாதைகள் ஏற்படவில்லை. உற்பத்தி ஆலையை நிறுத்தி தான், பழுதை சீரமைக்க வேண்டும். இதனால் இரண்டு, மூன்று நாட்கள் குடிநீர் வினியோகம் தடைபடும். ஓரிரு நாளில், இதற்கான அறிவிப்பு வெளியாகும். மே 1ம் தேதி முதல், உப்புத் தன்மை இல்லாமல், முழுதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
* உடல் எரிச்சல்
உப்புத் தன்மை அதிகமான குடிநீரில் சமைத்தால், உணவின் சுவை மாறுபடுகிறது. காய்ச்சி பருகவும் முடியவில்லை. துணி துவைத்தால், சோப்பு நுரை மாற அதிக நீரை பயன்படுத்த வேண்டி உள்ளது. குளித்து விட்டு, மாற்று உடை அணிந்த பின் வியர்வை வந்தால், உடல் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.- என்.சுப்பிரமணி, 45, சோழிங்கநல்லுார்
உப்பு தன்மை அதிகம் கொண்ட குடிநீரை பருகினால், ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிறுநீரக பிரச்னையும் ஏற்படும். காய்ச்சி பருகினால், ஓரளவு உப்பு தன்மை குறையும். குளித்தால் அலர்ஜி, எரிச்சல் போன்ற பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- அரசு மருத்துவர்கள்
தினமும் குடிநீர் வரத்து பகுதிகள்
------ஏரிகள்-------புறநகர் ஏரிகளில் இருந்து 75 கோடி லிட்.,வீராணம் 7.3 கோடி லிட்.,கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்------மீஞ்சூர் 4 கோடி லிட்.,நெம்மேலி-1 -7 கோடி லிட்.,நெம்மேலி-2 12.3 கோடி லிட்.,-கிணறு கிணறுகளில் இருந்து 2 கோடி லிட்.,-- நமது நிருபர் --