''கந்துவட்டிக் கொடுமை தீரவே தீராது போல...''மித்ரா புலம்பியவாறே வந்தாள்.''என்ன சொல்ற மித்து...''''சித்ராக்கா... ஒரு லேடி, 10 ஆயிரம் ரூபாய், வாரம் ஆயிரம் ரூபாய் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி யிருக்காங்க... அடுத்தடுத்து லேடியோட கணவர், பெற்றோர்னு 20 நாள்ல இறந்துட்டாங்க...''பணம் கொடுத்த பைனான்ஸியர், கோர்ட்ல அரெஸ்ட் வாரன்ட் வாங்கியிருக்கறதா சொல்லி, 'நாசி - அவி' ஸ்டேஷனைச் சேர்ந்த 'அருளான' அந்த எஸ்.பி., ஏட்டு, அந்த லேடிய மிரட்டி ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப்போயிருக்காரு; ஒரு லட்சம் தரலேன்னா, சனி, ஞாயித்துக்கிழமை உள்ள வச்சிருவோம்னு 'வேல்' ஆன இன்ஸ்பெக்டர் மிரட்டியிருக்காரு... கடைசில 30 ஆயிரம் ரூபாயைப் பிடுங்கிட்டுத்தான் விட்ருக்காங்க...''''மித்து... எத்தனை சட்டம் போட்டாலும் கந்துவட்டிக்கொடுமை தீராது... போலீசும் இதுல தலையிட்டு காசு பார்க்காம விட மாட்டாங்க போல'' கால்கடுக்க நின்ற டீன்
''சித்ராக்கா... திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைல, 'நமக்கு நாமே' திட்டம் மூலமா நவீனப் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டுறாங்க... மினிஸ்டர் வேலு, சிகிச்சை மையப் பணிகளைப் பார்வையிட வந்திருந்தாரு...''அவரு வந்தப்ப, கட்சி நிர்வாகிகள் அடிச்சு பிடிச்சு சேர்கள்ல உக்காந்துட்டாங்க... கடைசில பார்த்தா டீனுக்கே இடம் தரல. யாராவது எந்திருச்சு, அவரை உக்கார வச்சிருக்கலாம். யாரும் கண்டுக்கல... அமைச்சர் பேசி முடிக்கிற வரைக்கும் கால்கடுக்க நின்னுக்கிட்டே தான் இருந்தாரு... எங்க துறை மினிஸ்டர் சுப்ரமணியம் இருந்தாருன்னா இப்படி நிக்க வச்சிருப்பாரான்னு டாக்டர்ஸ் ஆதங்கப்பட்டாங்களாம்.''''மித்து...மினிஸ்டர் உதயநிதி திருப்பூர் வந்தாருல்ல... மதியம் 12:15க்குத் தான் வந்தாரு... ஆனா, காலை ஆறு மணில இருந்தே போலீஸ்காரங்க கால்கடுக்க காத்து நின்னாங்க...''இருபது அடிக்கு ஒரு போலீஸை நிறுத்தியிருந்தாங்க... லேடி போலீசையும் வெயில்ல நிக்க வச்சுட்டாங்க... ஒட்டுமொத்த போலீசும் நொந்துட்டாங்க...''காலைல மங்கலம் ரோடு, திருமுருகன்பூண்டின்னு பல இடத்துல டிராபிக்கை வேற மாத்திவிட்டுட்டாங்க...''ஆனாலும் ஒரு நன்மை நடந்திருக்கு... மினிஸ்டர் வர்றதுக்காக, பல்லாங்குழி ரோட்டை எல்லாம் மூடிட்டாங்களாம்... மினிஸ்டர் வர்றப்ப கஷ்டப்பட்டாலும் பரவால்ல... மாசத்துக்கு ஒருதடவை வரட்டும்; ரோடாவது நல்லாகுதேன்னு போலீஸ்காரங்களே சொல்றாங்களாம்''''சித்ராக்கா...மினிஸ்டர் நிகழ்ச்சில பங்கேற்ற நிருபருங்களுக்கு பக்கோடா, ஸ்வீட் பாக்ஸ்லாம் கொடுத்துருக்காங்க... ஆனா, கெட்டுப்போனதாம். சில பேரு அது தெரியாம நாலஞ்சு பாக்ஸ்களைத் துாக்கிட்டுப் போனாங்களாம்.''வீட்டுக்குப் போனவுடனே சரியான 'டோஸ்' வாங்கியிருப்பாங்க... இல்லையாக்கா''கலகலவெனச் சிரித்தாள் மித்ரா. ஊராட்சி தலைவர் 'கெத்து'
''சித்ராக்கா... தி.மு.க., இளைஞரணி சார்புல மங்கலத்துல புதிய நுாலகத்தை உதயநிதி திறந்து வச்சிருக்காரு... அவரை வரவேற்று மாவட்ட இளைஞர் அணி சார்பில் வச்ச பேனர்கள்ல, உதயநிதி படங்களுக்கு இணையா இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் படம் இருந்துச்சாம்...''அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் படங்கள் ஒரு ஓரத்தில இருந்துச்சாம்... இளைஞர் அணியினர் உதயநிதியோட நேரடித்தொடர்புல இருக்கறவங்கங்கறதுனால சீனியர்ஸ் தங்களோட அதிருப்தியை வெளிக்காட்டிக்கலையாம்''''அப்படியா மித்து... அந்த 'மங்கலமான' ஏரியா ஊராட்சி தலைவருக்கும் தி.மு.க., மாவட்டச் செயலாளருக்கும் ஏழாம் பொருத்தம். ஊராட்சி தலைவருக்குத் தகவல் தராமலே பல அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை மா.செ., நடத்தியிருக்காரு...''மினிஸ்டர் சாமிநாதனோட ஆதரவாளர்ங்கறதுனாலயும், இளைஞர் அணி நிர்வாகியின் நெருங்கிய உறவினர்ங்கறதுனாலயும் நுாலகத்தை உதயநிதி மூலமா திறக்கவச்சு ஊராட்சித்தலைவர் கெத்து காமிச்சுட்டதா கட்சிக்காரங்க சொல்றாங்க...''''மா.செ., தரப்பு பதிலடி கொடுக்கலையா, சித்ராக்கா...''''அது இல்லாமலா மித்து... கூட்டணிக்கட்சி யினர் மற்றும் பொதுமக்கள் பெயரில ஏராளமான மனுக்களை உதயநிதிட்ட கொடுத்துருக்காங்க.... பெரும்பாலும், ஊராட்சித்தலைவர் மேலதான் புகாராம். ஆனா, உதயநிதியோ, மனுக்களை ஊராட்சித்தலைவர்ட்ட கொடுங்கன்னு அறிவுறுத்தினாராம்...''நெனச்சது ஒன்னு... நடந்தது வேற ஒன்னு... அப்செட் ஆகி மனுவைக் கொடுக்காமலே மனுவைக் கொண்டுவந்தவுங்க பலரும் போயிட்டாங்களாம்''''சித்ராக்கா... அவிநாசில ரேக்ளா பந்தயம் நடந்துச்சு... மினிஸ்டர் சாமிநாதன், எம்.பி., ராஜா படத்துக்கு கீழே மா.செ., படம் போட்டு பிளக்ஸ் பேனர் இருந்துச்சாம்... 'பிரகாசமான' ஒன்றியச்செயலாளர் நிர்வாகிகளுக்கு 'அர்ச்சனை' பண்ணிட்டாராம். அப்புறம், பிளக்ஸ் பேனரைக் கழட்டி வச்சிட்டாங்களாம்''''இதெல்லாம், அரசியல்ல சகஜம் மித்து... மினிஸ்டர் சுப்ரமணியன் அவிநாசி ஜி.ெஹச்சுல ஆய்வு செஞ்சிருக்காரு... ஆனா, யார் கிட்டயும் தகவல் தெரியப்படுத்தல... அவிநாசில இருக்கிற அடுக்குமாடி குடியிருப்புல வசிக்கிற பெண்கள், மினிஸ்டர் வேலு வந்தப்ப, குறைகளைச் சொன்னாங்க... அதேபோல இப்பவும் ஏதாவது எடக்கு மடக்கா நடந்துறப்போகுதுன்னு மினிஸ்டர் சுப்ரமணியன் வர்றதைச் சொல்லாம கட்சிக்காரங்க, பேரூராட்சி தரப்புல சொல்லாம விட்டுட்டாங்களாம்'' தே.மு.தி.க., கோஷ்டிப்பூசல்
''சித்ராக்கா... திருப்பூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை, பொறுப்பாளர் தலைமைல நடத்தியிருக்காங்க... இதுல தன்னோட செயல்பாடு சரியில்லன்னு புகார் கொடுத்த நிர்வாகிகளை கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கூப்பிடலையாம்; புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிங்க தனிக்கூட்டம் நடத்தி மாவட்ட பொறுப்பாளரை நீக்கணும்னு தீர்மானம் போடப்போறாங்களாம்''''மித்து... லோக்சபா எலக்ஷன்ல தி.மு.க., மொத்தமா அள்ளீட்டாங்க... பல்லடம் தி.மு.க.,வுலயோ உட்கட்சிப்பூசல் தலைவிரிச்சாடுது... நகரத்துலயும், ஒன்றியத்திலயும் ரெண்டு - ரெண்டு டீம். யார் யாரைத் தோக்கடிக்கலாம்னு காத்திருக்காங்களாம். உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க., காரங்க எப்படி எதிர்கொள்ளப்போறோமோன்னு புலம்பறாங்களாம்...'திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முகாம் நடந்தப்போ, அதிகாரி கையெழுத்துக்காக, மாலை வரை மாற்றுத்திறனாளிகள் காத்திருந்தாங்கன்னு பேப்பர்ல நியூஸ் பார்த்தியா மித்து...''மூனு மாசத்துக்கு ஒரு தடவை கலெக்டர் தலைமைல குறைகேட்புக்கூட்டம் நடத்தணுமாம். அதுவும் நடத்துறதில்லை... ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளும் மாவட்ட நிர்வாகத்து மேலயும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மீதும் அதிருப்தில இருக்காங்களாம்''''சித்ராக்கா... மாநகராட்சில 'பாளையம்தொட்டி' பகுதிக்கான வி.ஏ.ஓ.,வான 'ஜெயமானவர்' மேல புகார் குவியுதாம். ஆளும் கட்சி நிர்வாகி ஒருத்தர் மாவட்ட நிர்வாகத்துல புகார் கொடுத்தாராம். நடவடிக்கை இல்லாததால முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்தாராம். தாசில்தார் இருதரப்பும் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி பதிவுத்தபால் அனுப்புனாராம்.''விசாரணைக்கு வரச்சொன்ன அன்னிக்கு மாலைலதான் புகார்தாரருக்கு லெட்டரே வந்து சேர்ந்துச்சாம்... ஆனா விசாரணை நேரம் அன்னிக்கு காலைலயாம். இது எப்படி இருக்கு?''கிண்டலாகக் கூறினாள் மித்ரா.''மித்து... வெண்ணெய்க்குப் பேரு போன ஒன்றியத்துல ரெகுலர் பி.டி.ஓ., ஆபீசுக்கு சரியா வர்றதில்ல. ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வந்துட்டு போயிடறாராம். நிர்வாக பணி மந்தமாவதால, ஒன்றிய குழுவும் அதிருப்தி தெரிவிச் சிருக்கு...''''இந்த மாதிரி ஆபீசர்கள் எப்பத்திருந்துவாங்களோ... சரி... வயிறு கபகபங்குதுங்க்கா''அடுத்த சில நிமிடங்களில் தட்டில் சூடான வாழைக்காய் பஜ்ஜியும், ஏலக்காய் மணக்க டீயும் டேபிளுக்கு வந்தது.