உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வறுத்தெடுக்கும் ஆப்கள்! சூடாக சாப்பிட்டால் குறைந்த விலை; பார்சலில் அய்யோ தாங்க முடியலை!

வறுத்தெடுக்கும் ஆப்கள்! சூடாக சாப்பிட்டால் குறைந்த விலை; பார்சலில் அய்யோ தாங்க முடியலை!

கோவை : ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தால், உணவு டெலிவரி நிறுவனங்கள் வழக்கத்தை விட பல மடங்கு விலையை உயர்த்தி விடுவதாக, அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது வழக்கம். தற்போது இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.நமது வசதிக்காகவே ஆன் லைனில் ஆர்டர் செய்கிறோம். அதற்காக சற்று கூடுதல் விலை கொடுப்பதில் தவறில்லை என ஒருதரப்பினர் கூறுகின்றனர். அதற்காக, நேரில் செல்வதற்கும் ஆன்லைன் ஆர்டருக்குமான விலை வித்தியாசம் மிக அதிகமாக இருப்பது, பகல் நேர வழிப்பறி.இந்த கட்டணங்களை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும் என, மற்றொரு தரப்பினர் எதிர் கருத்தை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்கள், ஓட்டல் நிர்வாகம், வினியோகிப்பவர் என மூன்று தரப்பினரிடமும் பேசினோம்.

நவநீதன், கல்லுாரி மாணவர், ஒண்டிப்புதுார்:

நண்பர்களுடன் சேர்ந்தோ, தனியாகவோ வழக்கமான உணவுக்குப் பதில் வேறு உண்ணலாம் என நினைத்து ஆர்டர் செய்கிறோம். வீட்டில் யாரும் இல்லாத போது, நேரில் செல்வதற்குப் பதில் ஆர்டர் செய்கிறோம். ஆனால், டெலிவரி சார்ஜ், அதற்கு வரி, பார்சலுக்கு தனி கட்டணம், அதற்கு வரி என ரொம்பவும் அதிகமாகவே, கட்டணம் வசூலிக்கின்றனர்.விலையை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகிவிடுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் இருந்து, சேவை என்ற பெயரில் சுரண்டுவதாகவே கருதுகிறேன். உணவின் அளவும் சற்று குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன். கட்ட ணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.

செல்வகுமார், உணவு டெலிவரி செய்பவர்:

இது ஒரு நல்ல தொழிலாக இருக்கிறது. இன்னொருவரிடம் கைகட்டி நின்று பணிபுரியத் தேவையில்லை. தினமும் ரூ.700 முதல் ரூ.1,600 வரை சம்பாதிக்கலாம். டெலிவரி செய்யும் தூரத்தைப் பொறுத்து, ஒரு பார்சலுக்கு இவ்வளவு எனக் கிடைக்கும்.வடவள்ளியில் இருந்து, ஐ.ஓ.பி., காலனிக்குச் சென்றால், வார நாட்களில் ரூ.35; வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ரூ.50 கிடைக்கும். இன்று (நேற்று) மதியம் 1:00 மணியில் இருந்து 3:00 மணிக்குள் 5 ஆர்டர்களை முடித்தால், ரூ.400 கிடைக்கும் என ஆபர் உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கும் நிறைய ஆபர்கள் கிடைக்கின்றன. இருதரப்புக்குமே பயன்தான்.வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், இரவுப் பணி முடிந்து தனியே வசிப்பவர்கள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பில் இருப்பவர்கள் என, பலருக்கும் இது வசதியாக இருக்கிறது. இளைஞர்கள், குடும்பத்தினர் என மகிழ்ச்சியான தருணங்களுக்காகவும் ஆர்டர் செய்கின்றனர். இதுவரை விலை அதிகம் என எந்த வாடிக்கையாளரும் சொன்னதில்லை.

கதிர்வேல், இன்ஜினியர், விநாயகபுரம்:

தேவைக்காகவே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறோம் என்பதை மறுக்கவில்லை. பெற்றோர் இல்லாதபோது, ஆர்டர் செய்து சாப்பிடத் தோன்றும். ஒரு பிரபல ஓட்டலில் நேரில் சென்று சாப்பிட்டால், இரண்டு இட்லி 49 ரூபாய். அதுவே ஆன்லைனில் ஆர்டர் செய்தால், 110 ரூபாய். இரண்டு மடங்குக்கும் மேல் விலை அதிகம். நியாயமான கட்டணத்தைச் சேர்த்தால் பரவாயில்லை. இது ரொம்பவே அதிகம். அரசு தலையிட்டு முறைப்படுத்தலாம்.

பிரபல பிரியாணி கடை; நேரில்- பார்சல் ஒப்பீடு!

காந்திபுரத்தில், பிரியாணிக்கு பிரபலமான ஒரு கடையில், நேரில் ஒரு சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் அதன் விலை ரூ.220. 'ஸொமாட்டோ' 'ஆப்' வாயிலாக ஆர்டர் செய்தால், ரூ.100 ஆபர் அறிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி., 12.45 ரூபாய், பேக்கேஜிங் ரூ.14.94, அதற்கான ஜி.எஸ்.டி., ரூ.0.75, பிளாட்பார்ம் (செயலி நிறுவனத்துக்கான) கட்டணம் ரூ.6, அதன் மீதான ஜி.எஸ்.டி., ரூ.29.22 என மொத்தம் 234 ரூபாய் ஆகிறது. இதில் டெலிவரிக்கான கட்டணம் இலவசம்.இதுவே, 'ஸ்விக்கி' வாயிலாக ஆர்டர் செய்தால், சிக்கன் பிரியாணியின் விலை ரூ.299. டெலிவரி பார்ட்னருக்கான கட்டணம் ரூ. 27. சிறப்புத் தள்ளுபடி ரூ.125. பிளாட்பார்ம் கட்டணம் ரூ. 6. ரெஸ்டாரன்ட் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணங்கள் ரூ.28.73. மொத்தம் ரூ.235.(ஆபர் மற்றும் விலை நிலவரங்கள் ஆக.,5ம் தேதி நிலவரப்படி)

வருவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி'

கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது:உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களால், ஓட்டல் துறைக்கு பாதிப்பு இல்லை. வாடிக்கையாளர் நேரில் வருவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. உணவை சூடாகவும், சுவை குறையாமலும் பரிமாற முடியும். பார்சல் செய்து கொண்டு செல்லப்படும் உணவில் சுவை சற்று மாறுபடும். ஆனால், இது காலத்தின் தேவை.குடும்பத்தோடு அவுட்டிங் வருவதுபோல, ஓட்டலுக்கு மக்கள் வந்தனர். இப்போது வீட்டிலேயே வாங்கி சாப்பிட விரும்புகின்றனர். மக்களின் விருப்பத்துக்கேற்ப நாம் மாறாவிட்டால், துறையில் நீடித்திருக்க முடியாது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்காக, பார்சலில் உணவின் அளவைக் குறைப்பதில்லை. அதேசமயம், அவர்களுக்கு ஓட்டலைப் பொருத்து, 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த விலையை வாடிக்கையாளரின் பில்லில் சேர்க்க, விலையை அதிகரிக்கிறோம். உணவு டெலிவரி துறை, இவ்வளவு வளரும் என எதிர்பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் தேங்கி விடும் என்றுதான் நினைத்தோம். ஆனால், தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இன்னும் வளரும். மக்களுக்கு இந்த வசதி பிடித்திருப்பதால்தான், தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

theruvasagan
ஆக 06, 2024 19:10

சிலருக்கு வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது தவிர்க்க முடியாதது. ஆனால் பெரும்பாலானவர்கள் சோம்பேறித்தனத்தாலும் சமைப்பதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதினாலும் இஷ்டத்துக்கு ஆர்டர் செய்து வெட்டுகின்றனர். இதுவே உணவு டெலிவரி நிறுவனங்களின் அசுர வளர்ச்சிக்கு காரணம். பார்சல்களால் ஏகப்பபட்ட குப்பைகளும் அதிகமாகி சுற்றுச்சூழலை பாதிக்கிறது. உணவு டெலிவரி நிறுனங்களுக்கும் ஓலா யூபர் போன்ற பிரயாண வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் சேவைகளுக்கு வறைமுறை கட்டுப்பாடுகளை அரசு இன்னும் ஏற்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.


Srprd
ஆக 06, 2024 18:25

Swiggy charged me for a rain surcharge even after the rain had stopped. Proces are nearly 3 times the regular price. Plus delivery charges are more than Rs. 60 for just 2 km.


ponssasi
ஆக 06, 2024 16:15

நியாயமாக நடந்தால் ஆன்லைன் ஆர்டர் செய்பவர்களுக்கு குறைந்த விலையில் தந்து டெலிவரி செலவையும் ஹோட்டல் நிர்வாகமே ஏற்கவேண்டும், காரணம் யாதெனில் இவர்கள் ஆன்லைன் ஆர்டர் செய்பவர்கள் உணவை மட்டுமே எடுத்து செல்லுகின்றனர், இவர்களால் ஹோட்டல்களுக்கு மின்சார செலவு இல்லை, இவர்களுக்கு டேபிள் நாற்காலி இல்லை, தண்ணீர் செலவு இல்லை, பணியாளர் சப்ளையர் & கிளீனர் ஊதியம் கொடுக்கவேண்டியது இல்லை. குறைந்த இடத்தில அதிக விற்பனை என லாபம் கிடைக்கிறது. மக்களின் சோம்பேறித்தனத்தை மூலதனமாக வைத்து இவர்கள் லாபத்தை பார்க்கிறார்கள். இவர்களால் அலுவலகங்களுக்கு தேவையான கடை நிலை ஊழியர்கள் கிடைப்பதில்லை .


Ram pollachi
ஆக 06, 2024 13:57

பார்சல் வாங்கி உண்பதால் குப்பைகள் தான் அதிகரிக்கிறது... பண்டங்களை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு தருவதால் விலை உயர்வு மற்றும் குப்பைகள் கண்டபடி சேர்கிறது. உணவகங்களில் விலைப்பட்டியல் மற்றும் பொருளின் எடை குறித்த அறிவிப்பு பலகை இல்லை மேலும் வசூலிக்கும் ஜி எஸ் டி வரி செலுத்தப்படுகிறதா என்பதை நாம் அறிய முடியாது. பேக்கரி முதல் உணவகம் வரை முறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.


nv
ஆக 06, 2024 09:41

அரசு தலையிட்டு இந்த துறையை கட்டுப்படுத்த வேண்டும்.. இந்த செயலிகள் நடத்தும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கிறது.. வெறும் ஒரு பாலிதீன் பையில் பொருட்களை கொடுத்து Swiggy அதற்கும் packing charges வாங்குகிறது..


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 06, 2024 09:23

சிக்கனமாக இருக்க விரும்பினால் வீட்டில் சமைத்து உண்ணவும் அல்லது உணவகத்திற்கு நேரில் சென்று உண்ணவும் போக்குவரத்து செலவு, நேர விரையம் தனி. வீட்டில் இருந்து ஆர்டர் செய்து உண்ண விரும்பினால் சற்று ஆறிய உணவு, பார்சல் கட்டணம், ஆப் கமிஷன், டெலிவரி கட்டணம், வரி கொடுக்க தயாராக இருக்க வேண்டும். புலம்புவதால் பயனில்லை.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி