UPDATED : ஏப் 12, 2024 03:03 AM | ADDED : ஏப் 12, 2024 01:59 AM
ராஜஸ்தானில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரஹலாத் குஞ்சல் போட்டியிடுவதால் பரபரப்பு நிலவுகிறது. ராஜஸ்தானில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வரும் 19 மற்றும் 26ம் தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள கோட்டா லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா களமிறக்கப்பட்டு உள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரஹலாத் குஞ்சல் போட்டியிடுகிறார்.கடந்த 2008 முதல் 2013 வரை பா.ஜ., சட்டசபை உறுப்பினராக இருந்த இவர், அதற்கடுத்து நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரசிடம் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், சமீபத்தில் பா.ஜ.,வில் இருந்து காங்கிரசில் சேர்ந்த பிரஹலாத் குஞ்சலுக்கு இந்த தேர்தலில் 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. புதிதாக காங்கிரசில் சேர்ந்துள்ளதால், அக்கட்சியிலேயே அவருக்கு ஆதரவு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், பா.ஜ.,வில் இருந்து விலகிச் சென்றுள்ளதால், அவருக்கு சரியான பாடம் புகட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது.இந்நிலையில், ஓம் பிர்லாவை எதிர்த்து களமிறங்கியுள்ள பிரஹலாத், கோட்டா தொகுதியில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். காங்கிரஸ் மற்றும் பா.ஜ., மாறி மாறி இந்த தொகுதியை கைப்பற்றி வரும் சூழலில், இரு தரப்பினரும் கோட்டாவை கோட்டையாக்கும் முயற்சியில் முனைப்புடன் ஓட்டு சேகரித்து வருகின்றனர். கடந்த இருமுறை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஓம் பிர்லா, ஹாட்ரிக் வெற்றியை பெரும் வகையில், பா.ஜ.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - நமது சிறப்பு நிருபர் -