உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 135 கிராமங்களில் வளர்ச்சி பணிகளுக்கு தடை வருமா?

தமிழகத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 135 கிராமங்களில் வளர்ச்சி பணிகளுக்கு தடை வருமா?

வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உள்ள பகுதிகளுக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தின், 6,914 சதுர கி.மீ., பரப்பளவுக்கு உட்பட்ட, 135 கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மூன்று கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டதில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு இடங்களில் காணப்படும் கட்டுப்பாடற்ற வளர்ச்சிப் பணிகளே நிலச்சரிவுக்கு காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.அதேநேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் தன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்து வருகிறது. அதனால், 1986ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி, மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, 1987ல் முடிவு செய்தது. இதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை முழுவதையும், இ.எஸ்.ஏ., எனப்படும், 'இகலாஜிக்கல் சென்சிட்டிவ் ஏரியா' என, சூழல் உணர்திறன் என்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்க முடிவானது.இப்படி ஒட்டுமொத்தமாக அறிவித்தால், அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். சில மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தன. இதையடுத்து, 2009ல் மாதவ் காட்கில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி, மேற்கு தொடர்ச்சி மலையை மூன்று வகையாக பிரித்து, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உள்ள பகுதியாக அறிவித்து, கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைத்தது. இதற்கும் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதன்பின், நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், கஸ்துாரி ரங்கன் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலையில், 56,825 சதுர கி.மீ., பகுதியை அதாவது, மொத்த நில பரப்பில், 37 சதவீதத்தை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டது.இதை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது. இதற்கான நடவடிக்கைகளை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் தான், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கான வரைவு அறிக்கையை, ஜூலை 31ல் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில்…

அந்த வரைவு அறிக்கையில், தமிழகத்தில், 6,914 சதுர கி.மீ., பரப்பளவு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உள்ள பகுதிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில், 135 கிராமங்கள் வருகின்றன.இந்த கிராமங்களில், தொழிற்சாலைகள், குவாரிகள், கல்வி நிறுவன கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கப்படும். தற்போது செயல்பட்டு வரும் இது சார்ந்த நிறுவனங்களை, குறித்த காலத்திற்குள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும். சாதாரண குடியிருப்புகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதுதொடர்பாக, பொதுமக்கள், தன்னார்வலர்கள், அமைப்புகள், மாநில அரசுகள் தங்கள் கருத்துகளை, 60 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில், 55 கிராமங்கள், 205 வனப்பகுதிகள் மட்டுமே, இந்த அறிக்கைக்கு பொருந்தும் நிலையில் இருப்பதாகவும், அதனால் மொத்த பரப்பளவை, 6,665 சதுர கி.மீ.,யாக திருத்த வேண்டும் என, தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை, 2019ல் அளித்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கட்டுப்பாடு அவசியம்

இதுகுறித்து, சூழலியல் பாதுகாப்பு ஆர்வலர்களான 'ஓசை'அமைப்பின் தலைவர் கே.காளிதாஸ் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வழக்கமான கடின பாறைகளுக்கு பதில், மண் குவியலால் உருவானதாக உள்ளது. இதில், காணப்படும் மென்மை தன்மையே, இதன் சிறப்பு அம்சம். எளிதில் உடையும் தன்மை உடையதாக காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பாதுகாப்பது, சூழலியல் ரீதியாக மிக மிக அவசியம். இதற்காக சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட கமிட்டிகளின் பரிந்துரை அடிப்படையில் தான், தற்போதைய அறிக்கை வந்துள்ளது.இதனால், மேற்கு தொடர்ச்சி மலையின் குறிப்பிட்ட சில பகுதிகளில், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்; சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கும் நிலை ஏற்படும். கோவையில் ஏற்படும் வளர்ச்சி போன்று, நீலகிரி மாவட்டத்திலும் வளர்ச்சி திட்டங்கள் வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சூழலியல் பாதிப்பை அதிகரிக்கும். நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில், அதன் தாங்கும் திறன் எப்படி உள்ளது என்று பார்த்து, அதற்கேற்ற அளவில் தான் வளர்ச்சி திட்டங்கள் இருக்க வேண்டும். இதை உறுதி செய்ய, மத்திய அரசின் தற்போதைய அறிக்கை வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விதிமீறல்களை தடுக்க வேண்டும்

வயநாடு நிலச்சரிவுக்கு பின், நீலகிரி மாவட்டத்தில், மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதில், சூழலியல் உணர்திறன் பகுதி என அறிவிக்கும் மத்திய அரசின் வரைவு அறிக்கை குறித்து, உள்ளூர் மக்களுக்கு முழுமையான விபரங்கள் வந்து சேரவில்லை. தமிழகத்தில் கடுமையான மழைப்பொழிவு காலங்களில், நீலகிரியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்த மாவட்டத்துக்கு சுற்றுலா தான் பிரதான வருவாய் ஆதாரம். இதை முடக்கினால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.மலைப்பகுதிகளில் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளும் போது, கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம். பள்ளி வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்வது போல, கட்டுமான திட்டங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து, விதிமீறல் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மலைப்பகுதிகளில், மண் அடுக்கு வலுவில்லாத இடங்களில், 'ரீடெய்னிங் வால்' எனப்படும், தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும். நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தனி நிதி ஒதுக்கி, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

- பி.பாலமுருகன், கட்டட அமைப்பியல் பொறியாளர்

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N DHANDAPANI
ஆக 14, 2024 21:22

இந்தப் பிரச்சனையால் மிகவும் பாதிப்படைந்துள்ள விவசாய குடும்பங்கள் சார்பாக தினமலருக்கு மிக்க நன்றி ..... இந்தச் செய்தி ஒவ்வொரு விவசாயிக்கும் சென்று சேரவும் அவர்கள் இதற்கான கருத்துக்களை தெரிவிக்கவும் தாங்கள் வழிவகை செய்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி


sundaran manogaran
ஆக 13, 2024 18:15

நீலகிரி மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்தான்.10சதவீத மக்கள் கூட சுற்றுலாவால் பயன் அடைவதில்லை.எனவே ஆர்கானிக் விவசாயம் போன்றவற்றை ஊக்குவிக்கும் திட்டம் தேவை.மலைபாபகுதி மேம்பாட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தப்படவேண்டும்.ரியல் எஸ்டேட் வியாபாரத்தைக்கட்டுப்படுத்த வேண்டும்.நகரமயமாக்கல் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை மறு வரையறை செய்து மாவட்டம் முழுவதும் சிற்றூராட்சிகளாக இருக்கும் வகையில் மாற்றியமைத்து மக்கள் வாழ்க்கை தரம் உயர வழிவகைசேய்ய வேண்டும்.


Ramesh Sargam
ஆக 12, 2024 20:40

கேரளா, தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கெல்லாம் நிலச்சரிவு அபாயம் இருக்கிறதோ அங்கெல்லாம் எந்த வளர்ச்சி பணியும் வேண்டாம். வயநாட்டில் இதுவரை நாம் அறிந்தது நானூறுக்கும் மேட்பட்டவர்கள் இறந்திருப்பது. நமக்கு தெரியாமல் மண்ணில் புதைந்துபோனவர்கள், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டவர்கள் எவ்வளவோ? மேலும் மிருகங்களும் இறந்திருக்கின்றன, அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. வேண்டாம் இனியும் இதுபோன்ற ஒரு விபத்து. மனித உயிர், மிருகங்கள் உயிர் முக்கியம். வளர்ச்சி அப்புறம்.


N Sasikumar Yadhav
ஆக 12, 2024 09:11

நீங்க தடை போடுவதற்குள் கன்னியாகுமரி மலைகளை விழுங்கிவிடும் ஓன்கோல் கோபாலபுர திராவிட மாடல்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ