உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேர்தல் நாளில் இலவச பஸ் வசதி செய்யப்படுமா? 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு இதுவும் ஒரு முயற்சி தான்

தேர்தல் நாளில் இலவச பஸ் வசதி செய்யப்படுமா? 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு இதுவும் ஒரு முயற்சி தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, நெடுந்துாரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் சென்று வர வசதியாக, ஏப்., 19 மட்டும் இலவச பஸ் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் வரும், 19ல் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. இம்முறை, 100 சதவீத ஓட்டுப்பதிவுக்காக, தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.கிராமப்புறங்களில் வசிப்போர், ஓட்டளிப்பதை கடமையாக உணர்ந்து, வரிசையில் காத்திருந்து ஓட்டளித்துச் செல்கின்றனர். நகர்ப்புறத்தில் அப்படி இருப்பதில்லை. நகர்ப்புறங்களில் உள்ள சில பகுதிகளில், 30 சதவீதம், 40 சதவீதம், 50 சதவீதமே ஓட்டு பதிவாகிறது. இதுபோன்ற ஓட்டுச்சாவடிகளை அடையாளம் கண்டு, ஓட்டு சதவீதத்தை அதிகாரிக்க, தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆராய்வது அவசியம்

இதில், ஓட்டுப்போடுவதை வாக்காளர்கள் தவிர்ப்பதற்கான காரணங்களை ஆராய வேண்டியது அவசியம். முந்தைய காலங்களில், வெகுதுாரத்தில் வசிக்கும் வாக்காளர்களை அரசியல் கட்சியினர் வாகனங்களில் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்தனர். அது, குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஓட்டளிக்க அழுத்தம் கொடுப்பது போன்ற சூழல் உருவானதால், வாக்காளர்களை வாகனங்களில் கட்சியினர் அழைத்து வருவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இது ஒரு விதத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவதற்கு காரணமாகி விட்டது. அதாவது, ஓட்டுச்சாவடியில் இருந்து வெகுதுாரத்தில் வசிக்கும் மக்கள் ஓட்டளிக்க விரும்பாமல், தவிர்த்து விடுகின்றனர்.

இடப்பெயர்ச்சி

நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்கள், சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்ச்சியாவது வாடிக்கை. பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது மகள் படிப்பு மற்றும் மகனின் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவோ, வெவ்வேறு இடங்களுக்கு வீட்டை மாற்றுகின்றனர். இதுபோன்ற இடப்பெயர்ச்சி, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி நடப்பது வழக்கம். இவர்களுக்கு ஓட்டுரிமை ஓரிடத்திலும், வசிக்கும் பகுதி வேறிடத்திலும் இருக்கிறது. ஓட்டு போடுவதற்காக மெனக்கெட்டு, அவர்கள் பயணப்பட்டு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

நகருக்கு வெளியே

உதாரணத்துக்கு, உக்கடம் சி.எம்.சி., காலனியில் வசித்த துாய்மைப் பணியாளர்கள் குடும்பத்தினரில் பலரை, ஈச்சனாரி மலுமிச்சம்பட்டியில் உள்ள குடியிருப்புக்கு மாற்றினர். ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்த மக்களை, வெள்ளலுாருக்கு மாற்றினர். காந்திபுரத்தில் வசித்த மக்களை, கீரணத்தத்துக்கு இடப்பெயர்ச்சி செய்ய வைத்தனர். இவர்களுக்கு, ஏற்கனவே வசித்த பகுதிகளிலேயே ஓட்டுரிமை இருக்கிறது. இவர்கள் ஓட்டு போட வருவதற்கு விரும்பாமல் முடங்கி விடுகின்றனர்.

பஸ் வசதி அவசியம்

கொரோனா தொற்று பரவிய காலத்தில், துாய்மைப் பணியாளர்கள் ஆற்றிய பணி அளப்பரியது. இவர்களது குடியிருப்புகளுக்கு தினமும் பஸ்கள் அனுப்பி, இலவசமாக அழைத்து வரப்பட்டு, பணி முடிந்ததும் அழைத்துச் சென்று குடியிருப்பில் இறக்கி விடப்பட்டனர்.இதேபோன்ற நடைமுறையை, லோக்சபா தேர்தலுக்கும் பின்பற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது. இதை சற்று விரிவுபடுத்தி, ஓட்டளிக்கச் செல்லும் அனைத்து தரப்பினருக்கும் இலவச பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால், ஓட்டுப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரிக்கும்; 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற தேர்தல் கமிஷன் கோஷத்துக்கு வெற்றி கிடைக்கும்.

கரம் கோர்ப்போம்!

காலை முதல் மாலை வரை ஓட்டுப் போடுவதற்காக மட்டும் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 'பாயின்ட் டூ பாயின்ட்' போல் இலவச பஸ் இயக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்கள் மட்டுமின்றி, தனியார் பஸ்கள் இயக்குவோரும் இப்பணியில் கரம் கோர்த்து செயல்பட வேண்டும். தனியார் பஸ்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமையை குறைக்க, செலவில், 50 சதவீதத்தை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளலாம். ஓட்டுப்போடுவதற்கு ஓட்டுச்சாவடிக்குச் செல்லும் குடும்பத்தினருக்கு கட்டணச் சலுகை அளிக்க, கால் டாக்ஸி இயக்குவோர் முன் வர வேண்டும். இதுபோன்ற ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்யும்பட்சத்தில், குடும்பத்துடன் இடப்பெயர்ச்சியான வாக்காளர்களும் ஆர்வமுடன் ஓட்டளிக்க வருவர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ