உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  வெளிநாட்டு பயணங்களால் பைசா பிரயோஜனம் இல்லை: முதல்வர் மீது அன்புமணி கடும் குற்றச்சாட்டு

 வெளிநாட்டு பயணங்களால் பைசா பிரயோஜனம் இல்லை: முதல்வர் மீது அன்புமணி கடும் குற்றச்சாட்டு

சென்னை: ''முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்களால், ஒரு பைசா கூட முதலீடு வரவில்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார். பா.ம.க., சார்பில் தயாரிக்கப்பட்ட, 'தி.மு.க., அரசின் பொய் தொழில் முதலீடுகள்: 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மோசடி கதை' என்ற ஆவணத்தை வெளியிட்டு, அவர் பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், 11.32 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிற்கான, 1059 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதனால், 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலினும், தொழில் துறை அமைச்சர் ராஜாவும் அறிவித்தனர். இதில், 40 சதவீத முதலீடுகள், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கானவை. 1059 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 5 சதவீதம் மட்டுமே முழுமையான செயல் பாட்டிற்கு வந்துள்ளன. தி.மு.க., ஆட்சியில், இதுவரை நடந்த 8 அமைச்சரவை கூட்டங்களில், 1.56 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்த முதலீடுகளில் 3 சதவீதம் மட்டுமே வெளிநாட்டு முதலீடுகள். நான்கரை ஆண்டுகளில் செய்யப்பட்ட மொத்த முதலீடுகளின் மதிப்பு 8.8 சதவீதம், அதாவது 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவுதான். ஆனால், 11.32 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வந்து விட்டதாக, தி.மு.க., அரசு கணக்கு காட்டுகிறது; இது அரசின் மோசடியை காட்டுகிறது. முதல்வர் ஸ்டாலின் இதுவரை துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய, ஏழு நாடுகளுக்கு பயணம் செய்தார். அப்போது, 34,014 கோடி ரூபாய் முதலீட்டுக்கான, 66 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால், அதில் ஒரு பைசா கூட முதலீடு வரவில்லை. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ஒன்றுகூட முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. 70,800 கோடி ரூபாய் டாடா பவர், 52,474 கோடி ரூபாய் ஏ.சி.எம்.இ., கிளீன்டெக், 42,768 கோடி ரூபாய் அதானி குழும முதலீடுகள் வரவில்லை. ஆந்திராவில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன; வரிச்சலுகை அளிக்கப்படுகிறது; கமிஷன் கேட்கப்படுவதில்லை. இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள்கூட, அங்கே செல்கின்றன. கும்மிடிப்பூண்டியிலிருந்து, 30 கி.மீ., தொலைவில் ஆந்திராவில் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்யும் நிறுவனங்கள், தமிழகத்திற்கு வருவதில்லை. ஆனால், 11.32 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வந்து விட்டதாகவும், 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். அதை அம்பலப்படுத்தவே, தி.மு.க., அரசின் பொய் தொழில் முதலீடுகள் என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை