சென்னை விமான நிலையத்தில், நடப்பாண்டின் ஜன., முதல் நவ., வரை உள்நாடு, வெளிநாடு என 2.47 கோடி பேர் பயணித்துள்ளனர். பின்தங்கிய நிலையில் இருந்த சர்வதேச விமான போக்குவரத்து, படிப்படியாக உயர்ந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும்; அதேபோல் தாய்லாந்து, சிங்கப்பூர், துபாய், மலேஷியா, இலங்கை ஆகிய சர்வதேச நாடுகளுக்கும், விமானங்கள் இயக்கப்படுகின்றன.மூன்று முனையங்களுடன் செயல்படும் இந்த விமான நிலையத்தில் தினசரி 55,000த்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.கடந்த 2024யை விட 2025ம் ஆண்டின் ஜன., முதல் நவ., வரை, உள்நாடு மற்றும் வெளிநாடு என, சென்னை விமான நிலையத்தில் 2.47 கோடி பயணியர் வருகை தந்துள்ளனர்.ஆண்டுக்கு 3.50 கோடி பயணியரை கையாள இலக்கு நிர்ணயித்த நிலையில், பயணியரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், உள்நாட்டில் உள்ள விமான சேவைகளை போலவே, சர்வதேச நாடுகளுக்கும், விமானங்களை அதிகமாக இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா நோய் தொற்றுக்கு முன் வியட்நாம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் நேரடி விமான சேவை இருந்தது. தொற்று பரவலுக்கு பின், பல சர்வதேச சேவைகள் பறிபோனது.மீண்டும் இரு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முன்னுரிமை தந்தால், சர்வதேச சேவை கணிசமாக உயரும் என, 'ஏவியேஷன்' வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ★ சென்னை விமான நிலையத்தில் கடந்த 11 மாதங்களில் 1.71 கோடி உள்நாட்டு பயணியர் பயணித்துள்ளனர் ★ 75 லட்சம் சர்வதேச பயணியர் பயணித்துள்ளனர் ★ 2024ல் 11 மாதங்களை ஒப்பிடுகையில் 2025ல் 48.5 லட்சம் பயணியரின் வருகை அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக 24.4 சதவீதம் வளர்ச்சி ★கடந்தாண்டு 53 லட்சமாக இருந்த சர்வதேச பயணியர் எண்ணிக்கை தற்போது 75.4 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 42.3 சதவீதம் வளர்ச்சி.- நமது நிருபர் -