உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவையில் மலர் கண்காட்சி நடத்தியதில் சர்ச்சை!

கோவையில் மலர் கண்காட்சி நடத்தியதில் சர்ச்சை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

-நமது சிறப்பு நிருபர்-கோவையில் பல ஆண்டுகளுக்குப் பின்பு நடத்தப்பட்ட மலர் கண்காட்சியின் வருவாய் குறித்து, முன்பு போலவே மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், பல்கலை வளாகத்திலுள்ள தாவரவியல் பூங்காவில், கடந்த 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள், ஆறாவது மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. வேளாண் பல்கலை நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய இந்த கண்காட்சியில், 2 லட்சம் மலர்கள், 13 விதமான வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.பெரியவர்களுக்கு 100 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய் நுழைவுக் கட்டணமாகவும், காருக்கு 100 ரூபாய், டூ வீலருக்கு 30 ரூபாயும் 'பார்க்கிங்' கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. மூன்று நாட்களிலும் சேர்த்து, பெரியவர்கள் 46 ஆயிரத்து 269 பேரும், சிறியவர்கள் 13 ஆயிரத்து 811 பேரும், பல்கலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 8 ஆயிரம் பேருமாக மொத்தம் 68 ஆயிரத்து 80 பேர், இந்த கண்காட்சியைப் பார்வையிட்டனர்; எல்லாச் செலவும் போக, மொத்தத்தில் ரூ.18 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று வேளாண் பல்கலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.இரண்டு லட்சம் மலர்கள், 13 விதமான வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவையனைத்தும், ரோட்டரி கிளப் ஸ்பான்சர் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் வருவாயே ரூ.43 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், பார்க்கிங் கட்டணம், உள்ளே அமைக்கப்பட்டிருந்த தனியார் அரங்கங்கள், நர்சரி, உணவகங்கள் ஆகியவற்றுக்கான வாடகை வருவாய் விபரம் தெரிவிக்கப்படவில்லை.மொத்த வருவாய் எவ்வளவு, எது எதற்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டன என்பது குறித்த விபரங்களை, பல்கலை நிர்வாகத்திடம் கேட்டபோது, குத்து மதிப்பாக விபரம் தரப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல மலர் கண்காட்சி நடத்தப்பட்டபோது, நிறைய முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில்தான், பல ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.பல ஆண்டுகளுக்குப் பின், இப்போதும் அதேபோன்று எவ்விதமான வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மலர் கண்காட்சி நடத்தப்பட்டிருப்பதாக மீண்டும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டிலிருந்து ஜனவரியில் கண்காட்சி நடத்தப்படுமென்றும், இதற்கான மலர்களை வேளாண் பல்கலை நிர்வாகமே உற்பத்தி செய்யும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து, மலர் கண்காட்சியை நடத்தி தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குவதற்குப் பதிலாக, தோட்டக்கலைத்துறையுடன் பல்கலை நிர்வாகம் இதை இணைந்து நடத்தலாம். வேளாண் பல்கலை நடத்தும் இந்த கண்காட்சியில், விவசாயிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை