'ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகளை பெறுவதற்காக, தி.மு.க.,வை மிரட்டும் வகையில், முன்கூட்டியே விருப்ப மனுக்களை வாங்கும் அறிவிப்பை தமிழக காங்கிரஸ் வெளியிடுவதற்கு, த.வெ.க., தலைவர் விஜய் ஆதரவு டில்லி காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்த அழுத்தமே காரணம்' என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சிகளுடன் பேச, காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, வரும் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; ஆட்சியில் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தியது; மேலும், வரும் 20ம் தேதிக்குள் முடிவை தெரிவிக்கும்படி, முதல்வரிடம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வரும் 15ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் அறிவித்தார்; அதன்பின், வரும் 31ம் தேதி வரை மனு அளிக்கலாம் என அறிவித்தார். இதற்கு, டில்லி மேலிடம் அளித்த அழுத்தமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: டில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரும் ஒன்றாக இணைந்து, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வியூகம் வகுத்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க., ஆதரவு கோஷ்டி தலைவர்கள், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். தி.மு.க.,வின் முடிவை தெரிந்து கொள்ளும் முன், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை வாங்க, வேணுகோபால், கிரிஷ் ஷோடங்கர் ஆகியோர் அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு, தி.மு.க.,விற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுக்கு, தி.மு.க., தரப்பில் குழு அமைக்க வில்லை. பின், எதற்காக 234 தொகுதிகளுக்கு விருப்ப மனு வாங்க வேண்டும் என்ற கேள்வி, தி.மு.க., தரப்பில் எழுந்துள்ளது. வரும் 14ம் தேதி டில்லியில், ராகுல் தலைமையில் ஓட்டு திருட்டு கண்டன பேரணி நடக்கிறது. மறுநாள் 15ம் தேதி, தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர்வதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்து முடிவெடுக்க, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதனால் தான், வரும் 31ம் தேதி வரை விருப்ப மனு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆட்சியில் பங்கு கேட்கும் கோஷ்டி தலைவர்கள் பேச்சு
காங்கிரசாரின் சமூக வலைதளங்களில், கூட்டணி ஆட்சி குறித்து பேசிய தலைவர்களின் வீடியோ பேச்சுகளை தொகுத்து, பதிவிட்டு வருகின்றனர். சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி.,க்கள் விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், கார்த்தி ஆகியோரின் பேச்சுகளை பரப்பி வருகின்றனர். இது, தி.மு.க.,வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல், பிரியங்கா பங்கேற்கும் மாநாடு
சட்டசபை தேர்தலையொட்டி, ராகுல் பங்கேற்கும் கிராம காங்கிரஸ் மாநாட்டை ஒருங்கிணைக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி குழு தலைவராக தங்கபாலு, வாகன வசதி ஏற்பாட்டு குழு தலைவராக திருநாவுக்கரசர், வரவேற்பு குழு தலைவராக எம்.கிருஷ்ணசாமி, விளம்பர குழு தலைவராக கே.எஸ்.அழகிரி, பிரசாரம் மற்றும் அணி திரட்டல் குழு தலைவராக பீட்டர் அல்போன்ஸ், மாநாட்டு திடல் அமைப்பு தலைவராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா பங்கேற்கும், மகளிர் பேரணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஜோதிமணி, உறுப்பினர்களாக எம்.பி., சுதா ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., ராணி, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட், முன்னாள் எம்.எல்.ஏ., ராணி வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.