தர்மபுரி: பாலக்கோடு அருகே அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிக்கு உரிய கட்டட வசதி இல்லாததால், கோவில் வளாகம், தெருவில் வகுப்புகள் நடந்து வருகின்றன.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பி.செட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜோதிஹள்ளியில், 2017ம் ஆண்டு வரை நான்கு வகுப்பறைகளுடன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. 2018ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, மாணவர்களின் நலன் கருதி, நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.தெருவில் மேஜை
தொடர்ந்து, தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக செயல்பட துவங்கின. இவற்றில், போதுமான வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், தொடக்கப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறை, உயர்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறை என்ற நிலையில் தற்போது வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், தொடக்கப் பள்ளியில் 72 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் 107 மாணவர்கள் படித்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக தொடக்கப்பள்ளிக்கு, இரு வகுப்பறை கட்டடம் மட்டும் உள்ளதால், மற்ற மூன்று வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பள்ளியின் எதிரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதேபோல், உயர்நிலைப் பள்ளிக்கும் இரு வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ளதால், மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பறை முன் உள்ள வராண்டா, பள்ளி முன் உள்ள தெருவில் மேஜை போடப்பட்டு, அதில் அமர்ந்து படித்து வருகின்றனர்.நடவடிக்கை
பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாளிலிருந்து, பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளி அருகில் அரசுக்கு சொந்தமான இடம் ஏதுமில்லாததால், மக்கள் சார்பில் இடம் தேர்வு செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.ஊர் பொதுமக்கள், 2022ல் பள்ளிக்கு அருகில், 1 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, பாலக்கோடு பி.டி.ஓ., பெயரில் பத்திரப்பதிவு செய்து ஒப்படைத்துள்ளனர். அதன் பின், கட்டடம் கட்ட வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்து வந்தனர்.ஆனால், இதுவரை பள்ளிக்கு கட்டடங்கள் கட்ட அனுமதி மற்றும் நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், கோவிலில் செயல்படும் மூன்று வகுப்பறைகளுக்கும் கரும்பலகைகள் வைப்பதற்கு கூட இடமில்லாத நிலை உள்ளது. அதிகாரிகள் இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.