உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க., தலைவராக நீடிப்பேன்.. மாம்பழ சின்னமும் எங்களுக்கே: அடித்து சொல்கிறார் அன்புமணி

பா.ம.க., தலைவராக நீடிப்பேன்.. மாம்பழ சின்னமும் எங்களுக்கே: அடித்து சொல்கிறார் அன்புமணி

''தி.மு.க.,வின் கைக்கூலிகள் தான் பா.ம.க.,வில் குழப்பம் செய்ய முயற்சிக்கின்றனர்,'' என அன்புமணி கூறினார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நல்லாவூரில், தங்கள் குலதெய்வமான பூர்ண - புஷ்கலா சமேத அய்யனார் கோவிலில் குடும்பத்துடன் அன்புமணி தரிசனம் செய்தார். பின்னர், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த ஊரான கீழ்சிவிரி கிராமத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின், அன்புமணி அளித்த பேட்டி: இந்திய தேர்தல் கமிஷன் விதிகளின்படி, பா.ம.க.,வின் தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை நீடிக்க எனக்கு முழு தகுதி உள்ளது. இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில், நான் வகிக்கும் தலைவர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், 'தேர்தல் கமிஷன் பிறப்பித்த அனுமதியை, எனக்கு கொடுத்த அந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது' என்றும், 'அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்குள் பிரச்னை இருந்தால், அதை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதம் செய்யலாம்' என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், இதே தீர்ப்பையே வழங்கினார். தேர்தல் கமிஷன் வழங்கிய அனுமதி, அங்கீகாரத்தை பற்றி நீதிமன்றம் எந்த கருத்தும் சொல்லவில்லை. அதனால், பா.ம.க.,வை வழி நடத்தும் பொறுப்பு என்னிடம் உள்ளது என்பதில் எந்த குழப்பமும் கிடையாது. தொடர்ந்து பா.ம.க., தலைவராக நானே நீடிப்பேன். மாம்பழச் சின்னமும் எங்களுக்கே. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆட்சியில் பங்கு என்பது தேர்தலுக்கு பின் முடிவு செய்யப்படும்.

டில்லியில் போராட்டம்

பா.ம.க.,வில் எந்த பிளவும் இல்லை; எந்த பாதிப்பும் கிடையாது. கடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுகளை விட கூடுதலாக, வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., பெறும். கட்சிக்குள் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படும் அனைத்து குழப்பங்களுக்கும், தி.மு.க., கைக்கூலிகளே காரணம். கைக்கூலிகளின் சதி திட்டம் அறிந்து முறியடிக்கப்பட்டு விட்டது. இதுவரை கூட்டணி அமையாததால், குழப்பம் இருப்பது போல் தெரியும். விரைவில் தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும். அதில், பா.ம.க., இடம் பெறும். தி.மு.க., மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதால், தேர்தலில் அது பிரதிபலிக்கும். இவ்வாறு அன்புமணி கூறினார். இதற்கிடையே, அன்புமணியை பா.ம.க., தலைவராக அங்கீகரித்த தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை கண்டித்து, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை