உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... - அகழாய்வு

ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... - அகழாய்வு

ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... (திருமலாபுரம்)

தென்காசி மாவட்டம், சிவகிரி ஒன்றியத்தில், திருமலாபுரம் கிராமத்துக்கு வடமேற்கில் 10 கி.மீ., தொலைவில், வாசுதேவ நல்லுாருக்கு அருகில் உள்ள குலசேகர பேரேரி கண்மாய்க்கு மேற்கில், 25 ஏக்கர் பரப்பளவில் இரும்பு கால இடுகாடு உள்ளது. இங்கு, 2024 முதல், கடந்த மே மாதம் வரை, அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார் தலைமையில், முதல் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. அதில், 13.50 மீட்டர் நீளம், 10.50 மீட்டர் அகலத்துக்கு, 35 கற்பலகைகளால் ஆன அரணுக்குள் ஈமத்தாழிகள் வைக்கப்பட்டதும், அதன்மேல், 1.50 மீட்டர் உயரத்துக்கு கூழாங்கற்கள் நிரப்பப்பட்டுள்ளதும் தெரியவந்தது.இங்கு, 38 குழிகள் தோண்டப்பட்டன. அவற்றில், 75 சிவப்பு மற்றும் ஒரு கருப்பு - சிவப்பு என, 76 ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை, கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்பு வண்ண மூடிகளால் மூடப்பட்டுள்ளன. தாழிகளின் கழுத்து பகுதியில் கூம்பு, கூம்பின்கீழ் வட்டம், வட்டத்திற்குள் கூட்டல் குறி அல்லது சக்கரம், ஆங்கில எழுத்தான 'யு' உள்ளிட்ட வடிவங்களில் புடைப்புச் சித்திரங்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. இவை, குலக் குறியீடாகவோ, எழுத்து உருவாவதற்கு முன் செய்திகளை பரிமாற பயன்படுத்தப்பட்ட சித்திரமாகவோ இருக்கலாம். ஒரு தாழியில், ஆமை, மான், மனிதர் மற்றும் மலை உருவங்கள் குழிச் சித்திரங்களாக அலங்கரிக்கின்றன. இந்த ஈமக்காடு, அரணுக்குள் இருப்பதால், குலத்தலைவர்களுக்கானதாக இருக்கலாம். இதன் அருகில் இன்னொரு ஈமக்காடும் உள்ளது.

மீள் அடக்கம்

இங்குள்ள தாழிகளில், பெரும்பாலனவை இரண்டாம் நிலை அடக்கங்களாகவே உள்ளன. அதாவது, இறந்தவரின் உடல்களை, எலும்புக்கூடாகும் வரை ஆகாயம் பார்த்தோ, சாதாரண குழியிலோ முதலில் அடக்கம் செய்து, பின், எலும்புக்கூட்டை எடுத்து, தாழி அல்லது பேழையில் அடக்கம் செய்யும் முறையே இரண்டாம் நிலை அடக்கம். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட எலும்புகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.மேலும், இங்கு முதன்மை, அடையாள அடக்கங்களும் உள்ளன. அவற்றில், எலும்பு கூட்டை வைக்காமல், இறந்தவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து நினைவு அடக்கம் செய்வது. இங்குள்ள தாழிகள் பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு ஆழங்களிலும் உள்ளதால், வெவ்வேறு காலகட்டங்களில் புதைக்கப்பட்டவை என்பது உறுதியாகிறது.

சடங்கு பொருட்கள்

தாழிகளுக்கு உள்ளேயும் வெளியேயும், கலையங்கள், பிரிமணைகள், கிண்ணங்கள், இரும்பாலான உளி, கோடரி, அம்பு முனை, கத்தி, ஈட்டி உள்ளிட்டவை சடங்கு பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த வகையில், மொத்தம், 250க்கும் மேற்பட்ட சடங்கு பொருட்கள் கிடைத்துள்ளன.இங்கு கிடைத்துள்ள ஈமத்தாழிகளில் புலி, கழுதைப்புலி போன்ற ஓவியங்கள் உள்ளன. தற்போது, இந்த பகுதியில் கழுதைப்புலி இல்லை. மூன்று மலைகளுக்கு இடையில் ஒரு மனிதன் நிற்பது போன்ற ஓவியம் உள்ளது. மேலும், பல தாழிகளில் பலவிதமான குறியீடுகள் உள்ளன.ஈமத்தாழிகளில் இவ்வாறான குறியீடுகள் இட்டதற்கான காரணம் என்ன, இவை உணர்த்தும் பொருள் என்ன என்பது குறித்து ஆராய வேண்டி உள்ளது. இங்கு, தனித்தன்மையாக ஈமச்சின்னங்களும் கிடைத்துள்ளதால், அகழாய்வுப்பணிகள் ஆர்வமூட்டுகின்றன. இது குறித்து அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார் கூறியதாவது; பொதுவாக, இரும்பு காலத்திற்கான சிவப்பு, கருப்பு - சிவப்பு நிற மண்பாண்டங்கள் கிடைத்துள்ளதால், 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இங்குள்ள தாழிகளும், தொல்பொருட்களும், ஆதிச்சநல்லுார், சிவகளை அகழாய்வு பொருட்களுடன் ஒத்துப் போகின்றன. இவற்றின் காலத்தை, ஒளிக்கற்றை காலக்கணக்கீடு வழியாக நிருவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, எனக் கூறினார்.

இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம்

மனிதர்கள், இரும்பை பயன்படுத்த தொடங்கிய காலமே இரும்பு காலம். இரும்பு பயன்பாட்டுக்குப் பின்தான், நவீன யுகத்தின் வளர்ச்சி வேகமானது. துருக்கியில் 4,225; ஐரோப்பாவில் 3,125 ஆண்டுகளுக்கு முன்பும் இரும்பு பயன்பாடு தொடங்கியது. நம் நாட்டின், உ.பி.,யில் 3,800; கர்நாடகாவின் ஹல்லுாருவில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாட்டிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.தமிழகத்தில், துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் 4,275; தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் 4,225; சேலம் மாவட்டம், மாங்காடு மற்றும் தெலுங்கனுாரில் 3,525 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளன. இவை, இரும்பு உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தமிழகம் முன்னோடி என்பதை நிரூபிக்கின்றன.தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கிடைத்த இரும்பு பொருள் ஒன்று 5,284 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை, அமெரிக்காவின் பீட்டா ஆய்வகம் உள்ளிட்ட முன்னணி ஆய்வகங்களின் ஆய்வு முடிவுகள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Arul Narayanan
செப் 09, 2025 10:11

அப்போ முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5830 வருடங்கள் முன்பு புழக்கத்தில் இருந்த இரும்பு உருக்கு பட்டறை கண்டு பிடிக்க பட்டது என்றாரே. அது இந்த பட்டியலில் இல்லை. அது டுபாக்கூர் கண்டு பிடிப்பா?


rama adhavan
செப் 09, 2025 00:27

எந்த பயனும் இல்லை இந்த ஆராட்சிகளால். கருப்பு சிவப்பு நிறம் என்ற உருட்டல் வேறு. அப்போவே திராவிட கட்சிகள் இருந்ததாக சிலர் இனி ஆரம்பிக்கலாம்.


ManiMurugan Murugan
செப் 08, 2025 23:40

அருமை


govind
செப் 08, 2025 17:14

நான்கு வழிச் சாலைகளாலும் பாலங்களாலும் ரியல் எஸ்டேட்டாலும் மக்கள் வாழிடம் குறுகிக் கொண்டே போகிறது.இதில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் ஊரையே தோண்டி சில மண்பாண்ட துண்டுகளுக்காக பல கோடி ரூபாய் வீண் விரயம் எதற்கு? இன்னும் 500 ஆண்டுகளுக்கு பின் அகழாய்வு செய்தால் தற்போதய தமிழன் குடித்து தூக்கி எறிந்த பிளாஸ்டிக் கோப்புகள்தான் இருக்கும்.


renga rajan
செப் 08, 2025 13:49

waste of time money and energy everywhere crematorium will find


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை