திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க., நிர்வாகியுமான ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான், சென்னையில் விடுதி, ஓட்டல் நடத்தி வருகிறார். சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு கொண்டு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு, 'மெத்தாம்பெட்டமைன்' போதை பொருளின் மூலப் பொருளான, 'சூடோபெட்ரின்' என்ற வேதிப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் தேடப்படுகிறார்.சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீடு, புரசைவாக்கத்தில் உள்ள அவரது விடுதி மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில், விசாரணைக்கு அழைக்கும் சம்மனை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஒட்டியுள்ளனர்.சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தகவல்களை தொடர்ந்து சேகரித்து வரும் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் கூறியதாவது:
உலக அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த, இந்திய அளவில் அமைக்கப்பட்டதே, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு. இந்திய அளவில் போதைப் பொருள் நடமாட்டம், தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து, இதன் அதிகாரிகள் ரகசிய தகவல்களை சேகரிப்பர்.பல நாட்டு போதை தடுப்பு பிரிவு போலீசாருடன் தகவல் பரிமாற்றம் செய்வதும், தகவல் பெறுவதும், அவர்களின் முக்கிய பணி. கிடைக்கும் தகவல்களை உறுதி செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வர். போதை கடத்தலில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, 1985ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் தடை சட்டத்தின் வாயிலாக, 10 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும்.அந்த பிரிவு அதிகாரிகளுக்கு, சமீபத்தில் அமெரிக்காவின் மருந்து அமலாக்க முகமைத் துறை அதிகாரிகள், ரகசிய தகவல் அனுப்பினர். இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு உணவு பொருட்களுடன், 'சூடோபெட்ரின்' கலந்து அனுப்பப்படுகிறது என்பதே, அந்த தகவல். முன்னதாக, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த விஷயத்தை உறுதி செய்த பின்னரே, இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்பே, இது தொடர்பான தகவல்கள், இந்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகளிடமும் இருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க, கூடுதல் விபரங்களை திரட்ட, அப்பிரிவின் துணை இயக்குனர் ஜெனரல் ஞானேஸ்வர் சிங் தலைமையில், பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், தொழில்நுட்ப அளவில் பல்வேறு சிறப்பான கட்டமைப்பை பெற்றிருக்கும் டில்லி சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்களும் இடம்பெற்றனர்.கடந்த பிப்., 15ல், டில்லியில் இருக்கும் பாசிதாரா பகுதியில் இருக்கும் சரக்கு குடோனுக்கு சென்று, சோதனை நடத்தினர். அந்த பகுதியில் சேமிப்பு கிடங்குகள் அதிகம். அங்கிருந்து தான், வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சரக்கு குடோனில் சந்தேகத்துக்கு இடமான பொருட்களை, உணவு பொருட்கள் என்ற பெயரில் 'பார்சல்' செய்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், முகேஷ் மற்றும் விழுப்புரம் அசோக்குமார் ஆகியோரை பிடித்தனர். பதப்படுத்தப்பட்ட தேங்காய் துகள், 'அஜினோமோட்டோ' போன்ற உப்பு துகளை, மலேஷியா வழியாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப, பார்சல் செய்து கொண்டிருந்ததாக, மூவரும் கூறினர்.தீவிர விசாரணையில், அதில் மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிக்க உதவும், 'சூடோபெட்ரின்' வேதிப் பொருளை கலந்திருப்பதை ஒப்புக் கொண்டனர். 50 கிலோ எடையுள்ள அவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; மதிப்பு, 75 கோடி ரூபாய்.கடத்தல் பின்னணியில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான், அவரது சகோதரர் முகம்மது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் இருப்பதை, பிடிபட்டவர்கள் கூறினர். ஜாபர் சாதிக் தலைமையில் ஒரு பெரிய குழு, இந்தியாவில் பல காலமாக போதை பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டதை, ஏற்கனவே அறிந்துள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.கடந்த சில ஆண்டுகளில் மட்டும், டில்லியில் இருந்து மலேஷியா வழியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு, 45 சரக்கு பெட்டிகளை அனுப்பி இருப்பது கண்டறியப்பட்டது. அனுப்பப்பட்ட போதை பொருளுக்கான மூலப் பொருட்களின் மதிப்பு, 2,000 கோடி ரூபாய் இருக்கும். இது வெளிநாட்டு ஏற்றுமதி கணக்கு தான்.இந்தியாவிற்கு உள்ளேயும் இதை போதை பொருள் தயாரிக்கவும், விற்பனைக்கும் பயன்படுத்தி இருப்பர். அதையும் சேர்த்தால், 15,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் புரண்டிருக்கும். போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தை வைத்து, ஜாபர் சாதிக் திரைப்படங்கள் தயாரித்துள்ளார். அவருக்கு, பல்துறை வி.ஐ.பி.,க்களிடமும் நல்ல அறிமுகமும், நெருக்கமும் இருந்துள்ளது.கடந்த 2021ல் கொரோனா உச்சத்தில் இருந்த கால கட்டங்களில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் சலீம், மைதீன் ஆகியோர், 'ஜே.எஸ்.எம்.ஸீ புட்ஸ், ஜூகோ ஓவர்சீஸ், ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ்' என்ற பெயர்களில், மூன்று நிறுவனங்களை துவக்கியுள்ளனர். அதற்கு முன் 2015ல், 'ஜே.எஸ்.எம்.டி.பென்சிக் அபைர்ஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.போதைப் பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், அந்த நிறுவனங்கள் துவங்கப்பட்டதாக, போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். எந்த பொருளாக இருந்தாலும், ஏற்றுமதி, இறக்குமதி சான்று பெற்ற நிறுவனத்துக்கு அளிக்கப்படும் பிரத்யேக எண் கொண்டு தான், வெளிநாட்டுக்கு பொருட்களை அனுப்ப முடியும்.எந்த நிறுவனத்துக்குரிய எண்ணை வைத்து, போதைப் பொருளுக்கான மூலப்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற விபரம் சேகரிக்கப்படுகிறது. ஜாபர் சாதிக்குக்கு மூலப் பொருளை அனுப்பியது யார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது.ஜாபர் சாதிக்குக்கு இதில் தொடர்பில்லை என்றால், உடனடியாக ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் சரணடைந்து, தன் நிலைப்பாட்டை கூறியிருக்க வேண்டும். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் முன், வழக்கறிஞர்களுடன் ஆஜராகி இருக்க வேண்டும். இதை செய்யாமல் தலைமறைவாகி இருப்பது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.போதைப் பொருள் கடத்தல் தொடர்பான இந்த பிரச்னையில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு தமிழக அரசும், போலீசும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
மிகவும் மோசமான போதை பொருள்
'மெத்தாம்பெட்டமைன்' எனும் போதைப் பொருள் தயாரிக்க உதவும் மூலப் பொருளான, 'சூடோபெட்ரின்' மருந்து பொருளுக்கான மூலப் பொருளாகவும் உள்ளது. ஆஸ்துமா, மூச்சிறைப்பு போன்ற பாதிப்புகளுக்கான மருந்தை, இப்பொருளை் கொண்டு தயாரிக்கின்றனர்.மருந்து தயாரிக்கும் மூலப் பொருளாக தான் வெளிநாடுகளுக்கு அனுப்பினோம் என்ற வாதத்தை முன் வைத்தாலும், மெத்தபெட்டமைன் மூளை நரம்புகளை பாதிக்க செய்யும் மோசமான போதைப் பொருள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.மனித உடலை முழுமையாக உணர்ச்சியற்றதாக்க கூடியது. ஒரு முறை இந்த போதைப் பொருளை உட்கொண்டவர்களால், அதில் இருந்து மீள்வது கடினம். இந்த போதைப் பொருளை உட்கொண்டவர்களுக்கு பசியே எடுக்காது. என்ன மனநிலையில் அதை உட்கொள்கின்றனரோ, அதே மனநிலையில் பல மணி நேரம் இருக்கக் கூடிய அளவுக்கு வீரியம் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.- நமது நிருபர் -