ஆட்சியில் பங்கு: இப்போது இல்லாவிட்டால் எப்போது? திருமாவுக்கு வி.சி.க.,வினர் நெருக்கடி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
'ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருமாறு தி.மு.க.,விடம் இந்த தேர்தலில் கேட்காவிட்டால், வேறு எப்போதுமே கேட்க முடியாத சூழல் ஏற்படும்' என, திருமாவளவனிடம் வி.சி., நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி துவங்கியது முதல், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என, அக்கட்சித் தலைவர் திருமாவளவன் முழக்கமிட்டு வருகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், 'ஆட்சியில் பங்கு' என்பது கனவாகவே உள்ளது.கடந்த 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் ஒன்பது இடங்களில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வி.சி., வென்றது. பின், 2011 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. அதன்பிறகு, 2016 தேர்தலில், தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் மூன்றாவது அணி அமைத்து, 25 தொகுதிகளில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை.கடந்த 2021 தேர்தலில் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் இணைந்து, ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் வி.சி., வெற்றி பெற்றது. தற்போது இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், வி.சி.,யை தங்கள் கூட்டணியில் இணைக்க, அ.தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் முயற்சித்து வருகின்றன.இந்நிலையில், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் இப்போதும் இருக்கிறது. ஆனால், வரும் சட்டசபை தேர்தலில், அதை முன்வைக்க மாட்டோம்' என திருமாவளவன் திடீரென கூறியிருப்பது, அவரது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, 'தி.மு.க., கூட்டணியில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காவிட்டால், வேறு எப்போதும் இது போன்ற சூழல் கிடைக்காது' என, திருமாவளவனிடம் அவரது கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று ஒரு கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்த, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முயற்சித்து வருகிறது. அக்கூட்டணியில் சேர, வி.சி.,க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கொள்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதாக திருமாளவளவன் தெரிவித்துள்ளார். தி.மு.க., கூட்டணியில் இருந்து வி.சி., வெளியேறினால், மற்ற கட்சிகளும் வெளியேற வழி ஏற்படும்.இச்சூழலை பயன்படுத்தி, ஆட்சி அதிகார முழக்கத்தை, திருமாவளவன் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தி.மு.க., கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தில் திருமாவளவன் பங்கு கேட்க வேண்டும். இச்சூழலை தவற விட்டால், இனி எப்போது இது போன்ற சூழல் அமையும் என தெரியவில்லை. எனவே, ஆட்சியில் பங்கு விவகாரத்தில் திருமாவளவன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -