உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  விஜயுடன் செங்கோட்டையன் கைகோர்ப்பு; அ.தி.மு.க.,வின் கூட்டணி கனவுக்கு செக்

 விஜயுடன் செங்கோட்டையன் கைகோர்ப்பு; அ.தி.மு.க.,வின் கூட்டணி கனவுக்கு செக்

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.,வில் சேருவதற்காக கோபியில் இருந்து சென்னை வந்துள்ளார். இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என, கடைசி நேரத்தில் அ.தி.மு.க., தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. முயற்சி பலிக்காது கட்சியில் இருந்து பிரிந்து சென்றோர்; விலக்கி வைக்கப்பட்டோரை மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கூறி, செங்கோட்டையன் எடுத்த முயற்சிகள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்த, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார். இதனால், செங்கோட்டையன், இனி அ.தி.மு.க.,வை இணைக்கும் முயற்சி பலிக்காது என முடிவெடுத்து, த.வெ.க.,வில் இணையும் தன்னுடைய விருப்பத்தை அக்கட்சியில் இருக்கும் தன் நண்பர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, நடிகர் விஜயிடம், தன்னுடைய செல்போன் வாயிலாக கான்பரன்ஸ் காலில் செங்கோட்டையனை பேச வைத்தார், த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா. மூவரும் பேசும்போது, 'அண்ணே... எம்.ஜி.ஆருடன் பயணித்தவர் நீங்கள்; உங்களைப் போன்றோர் எனக்கு வழிகாட்டியாக இருந்து கட்சியை நடத்த வேண்டும் என விரும்புகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்' என விஜய் உறுதி கொடுத்துள்ளார். அதன்பின்பே, வரும் 27ல் த.வெ.க.,வில் இணைய தேதி குறித்துள்ளார் செங்கோட்டையன். இதையடுத்து, கோபியில் இருந்து, நேற்று சென்னைக்கு புறப்பட்ட செங்கோட்டையனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'நல்லதே நடக்கும்' என்று மட்டும் சொல்லி, வழக்கம் போல கும்பிடு போட்டார். இன்று சென்னையில், த.வெ.க.,வின் மாநில பொறுப்பாளர்களை சந்தித்துப் பேசும் செங்கேட்டையன், விஜயையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இந்தத் தகவல்களை அறிந்ததும், அ.தி.மு.க., மேல்மட்டத் தலைவர்கள் கலக்கம் அடைந்தனர். வலுவான கூட்டணி அமைக்க முயலும் அ.தி.மு.க.,வின் முயற்சிகளுக்கு செங்கோட்டையனின் திடீர் முடிவு, சிக்கலாக இருக்கும் என்பதால், கடைசி நேரத்தில் அவரை சமாதானம் செய்ய துாதுவர்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. பதற்றம் ஆனால், செங்கோட்டையன், அ.தி.மு.க., துாதர்களை சந்திக்க மறுத்து விட்டதாகவும், அதன்பின்பே, சென்னைக்கு புறப்பட்டதாகவும் அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறியதாவது: செங்கோட்டையன் மீதான அதிருப்தியில், அவரை கட்சியில் இருந்து நீக்கும் வரை, தெம்பாகத்தான் இருந்தார் பழனிசாமி. ஆனால், அவர் த.வெ.க.,வில் இணையப் போகிறார் என்றதும், பதற்றமாகி விட்டார். அதனாலேயே, கடைசி நேர முயற்சியாக சமாதானம் செய்ய துாதுவர்கள் அனுப்பப்பட்டனர். அ.தி.மு.க., தலைமைக்கு ஆகாமல் போன செங்கோட்டையனை த.வெ.க.,வில் இணைத்து விட்டால், அதன் பின், அ.தி.மு.க.,வுடனான த.வெ.க., கூட்டணிக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் என, அச்சப்பட்டே, துாதுவர்கள் அனுப்பப்பட்டனர். அது, த.வெ.க., தலைவர் விஜய்க்கும் நன்கு தெரியும். இருந்தும், செங்கோட்டையனை அவர் கட்சியில் சேர முன் வந்திருப்பதன் வாயிலாக, தன்னை துச்சமாக மதிக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும் சேர்த்து செக் வைக்கவே, செங்கோட்டையனை கட்சியில் சேர்க்க பச்சைக் கொடி காட்டி உள்ளார். திட்டமிட்டப்படி செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைவு நிகழ்ந்து விட்டால், அதன் பின், தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். இந்நிகழ்வு நடந்து விட்டால், த.வெ.க., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்படாமல் போகும் என்பதால், தி.மு.க.,வும் இந்த விஷயத்தை உற்று நோக்கி வருகிறது. இதற்கிடையே, த.வெ.க., கூட்டணியில் இணையும்படி, செங்கோட்டையன் அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனை வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை