உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  மாவட்ட தலைவர்கள் மாற்றம் தமிழக காங்., கோரிக்கை; ராகுல் நிராகரிப்பு

 மாவட்ட தலைவர்கள் மாற்றம் தமிழக காங்., கோரிக்கை; ராகுல் நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திறமையான, தகுதியான மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய, 'சங்கதன் சிருஜன் அபியான்' திட்டத்தை, காங்கிரஸ் மேலிடம் அறிமுகப் படுத்தி உள்ளது. டில்லி மேலிடத்தில் இருந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு பார்வையாளர் அனுப்பி வைக்கப்பட்டு, புதிய மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில், இத்திட்டம் வெற்றி பெற்றதால், அனைத்து மாநிலங்களிலும் அதே முறையை செயல்படுத்துவதில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உறுதியாக உள்ளார். தமிழக காங்கிரசில், அமைப்பு ரீதியாக, 77 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். அதில் இறந்தோர், ராஜினாமா செய்தோர் என, 12 மாவட்டத் தலைவர்கள் பதவிகள் காலியாக உள்ளன. அதனால், மாவட்டத் தலைவர்களை மாற்ற, ராகுல் முடிவு செய்துள்ளார். அதற்கு, தமிழக காங்கிரசார் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். 'இன்னும், 4 மாதங்களில், தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் யாரையும் மாற்றக்கூடாது. தேர்தல் முடிந்த பின் மாற்றலாம்' என, டில்லி மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில் டில்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், இது தொடர்பாக, மேலிடத் தலைவர்களிடம் வலுவான காரணங்களை எடுத்து சொல்லி இருக்கிறார். ஆனாலும், அதை ஏற்க ராகுல் மறுத்து விட்டார். 'மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்வதை நிறுத்த முடியாது. தமிழகத்தில் மட்டும் நடைமுறையை திடுமென நிறுத்தினால், மற்ற மாநிலங்களிலும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்' என, ராகுல் நிராகரித்து விட்டார். இது குறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் காங்., கட்சிக்கான மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய, 38 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவில், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ராஜஸ்தான், கர்நாடகா போன்ற வெளி மாநில தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான மூவரை தேர்வு செய்து, அவர்களை சந்தித்து பேசிய பின், மாவட்டத்தலைவர் பட்டியலை தயார் செய்து, டில்லிக்கு அனுப்பி வைப்பர். இக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும், தலா 3 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு. மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. ஓரிரு நாளில் மாவட்ட வாரியாக தேர்வு குழு சென்று, புதிய மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய உள்ளதால், சரிவர வேலை செய்யாதவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை