'குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சிக்கிய பயங்கரவாதிகள், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்; மத தீவிரவாதிகள் அல்ல' என, இலங்கை அரசு திடீரென அறிவித்துள்ளது. அதனால், இந்த வழக்கு விசாரணையை எப்படி எடுத்துச் செல்வது என்ற குழப்பம், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் சென்று, ஆமதாபாத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்த முகமது நுஸ்ரத், 46, முகமது நுப்ரான், 27, முகமது பரிஸ், 35, முகமது ரஸ்தீன், 43 என தெரியவந்தது.ஆமதாபாதில் சிக்கிய நால்வரும், ஐ.எஸ்.கே.பி., என்ற, 'இஸ்லாமிக் ஸ்டேட் கோராஸான் புராவின்ஸ்' என்ற பயங்கவராத அமைப்பில், தீவிரமாக செயல்பட்டு உள்ளனர். அந்த அமைப்பை வலுப்படுத்த, போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல்களை திரட்டிய குஜராத் தீவிரவாத தடுப்பு போலீசார், அதன் அடிப்படையிலேயே தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில், பிடிபட்ட நால்வரின் பின்புலம் குறித்து நன்கு அறிந்த இலங்கை அரசு, பயங்கரவாத தடுப்பு போலீஸ் அதிகாரிகள் நால்வர் இடம் பெற்ற குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. இலங்கையிலும், இந்தியாவிலும் விசாரணை மேற்கொண்ட குழுவினர், ஆமதாபாத்தில் பிடிபட்டவர்களோடு தொடர்புடையவர்கள் என, இலங்கையில் இருப்போர் சிலரையும் கைது செய்தனர். இந்நிலையில், ஆமதாபாத் போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கை, என்.ஐ.ஏ., அதிகாரிகளும் விசாரிக்க துவங்கினர். அவர்கள், ஆமதாபாதில் பிடிபட்ட நால்வரும், பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, இலங்கையில் இருந்து அடிக்கடி தமிழகம் வந்து சென்றது குறித்த தகவல்களை சேகரித்தனர். இது தொடர்பாக, தமிழக போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரித்தனர். இந்நிலையில், 'ஆமதாபாத் விமான நிலையத்தில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்த நால்வரும், மத பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் அல்ல' என, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
இலங்கையில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாதுக்கு சென்று பிடிபட்ட நால்வர் குறித்து, இந்திய அரசு தரப்பில் தரப்பட்ட தகவல்கள் அடிப்படையில், நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்தையும், வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ஆமதாபாதில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் மத பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். தற்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும். ஏற்கனவே இலங்கையில், ஈஸ்டர் நாளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போல, வேறு பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் மீண்டும் நடக்காது. அந்த அளவுக்கு, பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். பாதுகாப்பு விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடன் இருப்பதால், மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலரின் இந்த பேட்டி, கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 'வழக்கு விசாரணையை அடுத்த கட்டமாக எப்படி எடுத்துச் செல்வது' என்ற தவிப்பில், ஆமதாபாத் போலீசாரும், என்.ஐ.ஏ., அதிகாரிகளும் உள்ளனர்.