உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவை மக்களை தவிக்க விடுகிறது தண்ணீர் பிரச்னை! 20 நாட்களுக்கு ஒருமுறை சப்ளை

கோவை மக்களை தவிக்க விடுகிறது தண்ணீர் பிரச்னை! 20 நாட்களுக்கு ஒருமுறை சப்ளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : சிறுவாணி, பில்லுார் அணைகளில் வேகமாக நீர் மட்டம் சரிந்துவரும் நிலையில், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோக இடைவெளி, 20 நாட்களை கடக்கிறது. பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கோவை மக்களின் குடிநீர் தேவையை சிறுவாணி, அத்திக்கடவு, பவானி உள்ளிட்ட நீராதாரங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில், 20 லட்சத்தையும் மக்கள் தொகை தாண்டிவிட்ட நிலையில், நாளுக்கு நாள் குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது.தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. கோவை மாநகராட்சியில், 32 வார்டுகளுக்கும் இந்த அணை முக்கிய ஆதாரமாக உள்ளது. வழித்தடத்தில் உள்ள ஏழு பேரூராட்சிகள், 10 ஊராட்சிகள் உள்ளிட்ட, 28 கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இருமாநில ஒப்பந்தப்படி கோவைக்கு தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை, சிறுவாணி அணையில் இருந்து, கேரளா வழங்க வேண்டும்.ஆனால், பருவ மழை பெய்தாலும், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேங்க விடாமல், கேரள நீர்ப்பாசன துறை அதிகாரிகள், ஆற்றில் வெளியேற்றுகின்றனர்.பருவ மழை கை கொடுக்காததால், கடந்த பிப்., இறுதியில் அணையின் நீர் மட்டம், 26 அடியாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், அணையின் நீர் மட்டம் தற்போது, 15.7 அடியாக குறைந்துள்ளது.

கைகொடுக்கும் பில்லுார்

சிறுவாணி அணையில் தண்ணீர் இல்லாத சமயத்தில் பில்லுார் அணை கைகொடுத்து வருகிறது. 100 அடி நீர் மட்டம் கொண்ட பில்லுார் அணையிலும், தற்போது, 62.5 அடியாக நீர்மட்டம் சரிந்துள்ளது. நபருக்கு நாளொன்றுக்கு, 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கும் விதமாக, பில்லுார்-3 திட்டமும் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இதனால், பில்லுார்,1, 2, 3 திட்டங்களுக்கு தினமும், 40 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்படுகிறது. இப்படியிருக்க, இரு அணைகளின்நீர் மட்டமும் வெகுவாக சரிந்துவருகிறது. இது, குடிநீர் வினியோக இடைவெளியை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை சப்ளை செய்யப்பட்ட குடிநீர், தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை என மாறி விட்டது. பொது குடிநீர் வினியோக குழாய்களை நம்பியிருப்போர், கடும் வெயிலிலும் காலிக்குடங்களுடன் காத்திருப்பதை காணமுடிகிறது.

சிக்கனம் வேண்டும்

தண்ணீர் சிக்கனத்தை உணராமல், தாறுமாறாக செலவு செய்வதும் பிரச்னை மேலும் தலைதுாக்க வழிவகுத்துள்ளது.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அணையின் தண்ணீர் வெப்பத்தால் ஆவியாகி வெளியேறி வருகிறது. அழுத்தம் காரணமாக ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. உடைப்பை தாமதமாக சரி செய்வதால், ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாவதும் தொடர்கிறது.இப்படிப்பட்ட சூழலில், பொது மக்களும் குடிநீர் சிக்கனத்தை கையாள வேண்டியது அவசியம். தற்போதைய இக்கட்டான காலத்தில், ஒவ்வொரு துளியையும் வீணாகாமல் சேமித்தால் மட்டுமே, அடுத்த மழை வரை தாக்குப்பிடிக்க முடியும்.

'குடிநீர் கேன்களே துணை'

கோ-ஆப்ரேட்டிவ் காலனி, ராஜிவ்காந்தி நகர் பகுதிகளில், குடிநீர் வந்து கிட்டத்தட்ட, 20 நாட்களை தாண்டிவிட்டது. அதுவும் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால், குடிநீரை பிடிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். வெளியில் இருந்து குடிநீர் கேன்கள் வாங்கிவந்து பயன்படுத்தும் நிலை உள்ளது.- சின்னமணி,62 உப்பிலிபாளையம்.

'சன்னமாகவே வருகிறது'

நாங்கள் பெரும்பாலும் பொது குடிநீர் குழாய்களையே நம்பியுள்ளோம். காலை, 7:30 முதல் மதியம், 2:00 மணி வரை, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் சன்னமாகவே வருவதால், அனைவராலும் குடங்களை நிரப்ப முடிவதில்லை. வார இறுதி நாட்களில் வினியோகித்தால், பிடித்து வைக்க வசதியாக இருக்கும்.- - பிரியா,42 புலியகுளம்

'மழையை மட்டுமே நம்பியுள்ளோம்'

மாநகராட்சி தலைமை பொறியாளர் அன்பழகன் கூறுகையில், ''மின் வாரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பில்லுார் அணையில் இருந்து கூடுதலாக தினமும், 3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.மழையை மட்டுமே தற்போது நம்பியுள்ளோம். அதேசமயம், போர்வெல்கள் அமைத்தல், பழுது பார்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன், தண்ணீர் லாரிகளும் தயார் நிலையில் உள்ளன. குடிநீர் தேவையுள்ள பகுதிகளுக்கு, லாரிகளில் வினியோகம் செய்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 08, 2024 04:52

காலம் காலமாக ஒரே பதில் தான் மழை பொய்த்து விட்டது டேமில் தண்ணீர் அளவு குறைந்து விட்டது தண்ணீர் சேமிக்க வேண்டும் மக்கள் தொகை அதிகமாகி விட்டது இதெல்லாம் நடக்கும் என்று முன்னமே தெரிந்திருந்தும் ஏன் அரசு இதற்கொரு நிரந்தர தீர்வு காணவில்லை கேரளா தண்ணீர் தேக்க விடுவதில்லை கர்நாடகம் தண்ணீர் விடுவதில்லை இந்த காரணத்தை இந்த திமுக அதிமுக மாறி மாறி சொல்லிக் கொண்டு உள்ளார்கள் இந்த எழுபது வருடங்களாக இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண துப்பில்லை என்றால் எதற்காக ஆட்சி செய்ய வேண்டும் தண்ணீர் என்பது அவசியமான ஒன்று இதற்காக யுத்தம் கூட வரலாம் யுத்தம் என்றால் துப்பாக்கி ஏந்தி அடுத்த நாட்டுடன் சண்டைக்கு செல்வதல்ல மக்களிடையே கொந்தளிப்பு உருவாகி அரசியல் வாதிகள் அதிகாரிகள் உடன் சண்டைக்கு போகலாம் ஊதிய சங்கையே ஊதியக் கொண்டு இருக்க கூடாது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை