உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆந்திராவில் நில உரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்? ஆட்சி மாற்றத்துக்கு அதுவே காரணம் என கருத்து

ஆந்திராவில் நில உரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்? ஆட்சி மாற்றத்துக்கு அதுவே காரணம் என கருத்து

ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டி அரசு அமல்படுத்திய நில உரிமை சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பலை தான், சட்டசபை தேர்தலில், அவரது ஆட்சியை வீழ்த்த காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.நாடு முழுதும் நில உரிமை ஆவணங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற, மத்திய அரசின், 'நிடி ஆயோக்' அமைப்பு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வருகிறது. நில உரிமையை வரையறுப்பதற்கான மாதிரி சட்டத்தை. 'நிடி ஆயோக்' அமைப்பு, 2020ல் வெளியிட்டது.இதை பின்பற்றி, அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கான சட்டங்களை நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, நில உரிமை சட்டத்தை, 2023 அக்டோபரில் அமல்படுத்தியது.

சட்டம் சொல்வது என்ன?

இதுகுறித்து, சொத்து விவகாரங்களுக்கான சட்ட வல்லுனரும், வழக்கறிஞருமான ஜி.ஷியாம்சுந்தர் கூறியதாவது:உலக அளவில் சொத்து பரிவர்த்தனையில், 'டீட்' எனப்படும் பத்திரங்கள் வாயிலான பதிவு, 'டைட்டில்' எனப்படும் உரிமை ரீதியிலான பதிவு என்ற, இரு வகையான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், மலேஷியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில், உரிமை அடிப்படையிலான பதிவு நடைமுறைகள் அமலில் உள்ளன.ஆனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், ஆவண அடிப்படையிலான பதிவு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உரிமை அடிப்படையிலான பதிவு என்றால், ஒரு குறிப்பிட்ட தாலுகாவில் உள்ள அனைத்து நிலங்களும் சர்வே செய்யப்பட்டு, அதன் எல்லை விபரங்கள் திரட்டப்படும். இந்த விபரங்கள் அடிப்படையில், எந்த நிலம் யாருடைய உடைமையாக உள்ளது என்ற விபரங்கள் திரட்டப்படும். இதன் அடிப்படையில், ஒவ்வொரு நிலத்தின் அளவும், அதன் உரிமையாளர் யார் என்பதும் தெளிவாக அறிவிக்கப்படும்.இதில், உரிமை தொடர்பான வழக்குகள் இருந்தால், அதுவும் தனியாக தொகுக்கப்படும். இந்த பணிகளுக்காக, தாலுகா அளவில் நில உரிமை அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் சார் - ---பதிவாளர் போன்றும், சர்வேயர் போன்றும் செயல்படுவார். இவ்வாறு அறிவிக்கப்படும் உரிமை அடிப்படையிலேயே, சொத்துக்களின் அடுத்தடுத்த பரிமாற்றங்கள் நடக்கும். இதனால், ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்கியவருக்கு, அதன் உரிமை தொடர்பான உத்தரவாதத்தை, அரசு அளிக்கும்.இதுபோன்ற வழிமுறைகள் நம் நாட்டுக்கு தேவை என, நிடி ஆயோக் அறிவித்த வரைவு அடிப்படையில், ஆந்திர அரசு நில உரிமை சட்டத்தை அமல்படுத்தியது. கள நிலையில், அங்கு எப்படி அரசு செயல்பட்டது என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நடந்தது என்ன?

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, நில உரிமை சட்டத்தை, 2023 அக்டோபரில் அமல்படுத்தியது. ஆந்திராவில், 17,000 வருவாய் கிராமங்களில், நில அளவை பணிகளை மேற்கொள்ள, 15,000 சர்வேயர்கள் தேவைப்படுகின்றனர்.இதில், இரண்டு ஆண்டுகளில், 2,000 கோடி ரூபாய் செலவு செய்ததில், 6,000 கிராமங்களில் மட்டுமே சர்வே மேற்கொள்ளப்பட்டு, நில உரிமை ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இந்த பின்னணியில், நில உரிமை சட்டம், அனைவருக்கும் நில உரிமையில் உத்தரவாதம் அளிக்கும் என, அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நிர்வாக ரீதியாக இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், அங்கு தெலுங்கு தேசம், ஜனசேனா உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தங்களின் நில உரிமை பறிபோகும் என்ற அடிப்படையில், மக்களிடம் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நில உரிமை சட்டம் திரும்ப பெறப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதன் அடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது; நில உரிமை சட்டம் திரும்ப பெறப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'ஆந்திர சட்டம் அவசிய தேவை!'

ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: ஆந்திராவில் நிறைவேற்றப்பட்டது போன்ற நில உரிமை சட்டம், தமிழகத்துக்கு அவசிய தேவையாகும். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், நில உரிமை என்பது சிக்கலாக உள்ளது. சில இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட பரிமாற்றங்கள் முடிந்த நிலையில், அதன் உரிமை தொடர்பான புதிய பிரச்னைகள் வருகின்றன. பல இடங்களில் வாரிசு இல்லாததால், உரிமை கோரப்படாத சொத்துக்கள் அதிகமாக உள்ளன. இதுபோன்ற சொத்துக்களை குறிவைத்து, சமூக விரோதிகள் போலி பத்திரங்களை தயாரித்து, நில மோசடியில் ஈடுபடுகின்றனர். நில உரிமை சட்டம் வந்தால், இதுபோன்ற மோசடிகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை