| ADDED : ஜூன் 05, 2024 11:20 PM
புதுச்சேரி: நீட் தேர்வில் புதுச்சேரியை சேர்ந்த 3431 பேர் மருத்துவம் படிக்க தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி நடந்தது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர்.கடந்த மே 30 தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் தருணத்தில் இளங்நிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.புதுச்சேரியை பொருத்தவரை கடந்தாண்டு 5797 பேர் நீட் தேர்வு எழுத பதிவு செய்து இருந்ததில் 5715 பேர் எதிர்கொண்டு எழுதி இருந்தனர். அதில் 3140 பேர் மருத்துவம் படிக்க தேர்ச்சிபெற்றிருந்தனர். அதாவது நீட் தேர்வு எழுதியவர்களில் 54.94 சதவீத பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 6461 பேர் நீட் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்த சூழ்நிலையில்,6318 பேர் மட்டுமே எதிர்கொண்டு எழுதினர்.இதில் 3431 பேர் மருத்துவம் பயில தகுதியை பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 54.30 சதவிதமாகும்.கடந்தாண்டை ஒப்பிடும்போது 0.64 சதவீதம் நீட் தேர்ச்சி குறைந்துள்ளது.தேசிய அளவிலான டாப் 100 பட்டியலில் புதுச்சேரியை சேர்ந்த ஒரு மாணவர் கூட இடம் பெறவில்லை.இதேபோல் டாப் 20 மாணவர்,மாணவிகள் பட்டியலிலும் புதுச்சேரி மாணவர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.ஓ.பி.சி., டாப் 10, இ.டபுள்யூ.எஸ்., டாப் 10, எஸ்.சி., பிரிவு மாணவர்கள் டாப் 10 பட்டியலிலும் புதுச்சேரி மாணவர்கள் ஒருவருர் கூட வரவில்லை.புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை தேசிய அளவில் 99.89 சதவீதம் மதிப்பெண்ணுடன் 1883வது இடத்தினை பிடித்த மாணவி பாரதி, இதே சதவீதம் மதிப்பெண்ணுடன் அகில இந்திய அளவில் 2181வது இடத்தினை பிடித்த மாணவர் இமயவர்மன் ஆகியோர் புதுச்சேரியில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.