| ADDED : ஜூன் 28, 2024 06:09 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் நுாதன முறையில் 30.12 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி கருவடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவரை டெலிகிராமில் தொடர் கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர், 18 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பூஜாஸ்ரீ. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி, 11 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.புதுச்சேரி தனத்துமேடு பகுதியை சேர்ந்தவர் உவராஜன். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி போல பேசினார். அதில், கிரெடிட் கார்டின் தொகையை உயர்த்த வங்கி விபரங்களை கேட்டார். தொடர்ந்து மொபைலுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை கொடுத்த அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 87 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. வினோத் என்பவர் இணையதளம் மூலம் வேலை தேடினார். அவர் போலியான இணையதளத்தில் 25 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.