புதுச்சேரி : புதுச்சேரியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதால், தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அ.தி.மு.க., வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், பணம் மற்றும் பரிசு பொருட்களை வீடு வீடாக வழங்குவதாக புகார் எழுந்தது.பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டி, அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கனிடம் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பணம் பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், புதுச்சேரி அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் மற்றும் வேட்பாளர் தமிழ்வேந்தன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் நேற்று , இ.சி.ஆரில் உள்ள ராஜிவ் சிக்னலில் இருந்து ஊர்வலமாக சென்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்போது, மாநிலம் முழுவதும் ஓட்டுக்கு பா.ஜ., 500, காங்., 200 ரூபாய் பட்டுவாடா செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.பின்னர், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனை, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் சந்தித்து, பணம் பட்டுவாடா தொடர்பான வீடியோ ஆதாரங்களை காண்பித்து முறையிட்டனர்.பின்னர் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், புதுச்சேரியில் இன்று ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. எவ்வித அச்சமின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர்.இதற்கான வீடியோ ஆதாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காட்டி உள்ளேன். ஏற்கனவே, 3 முறை நானே நேரில் புகார் அளித்துள்ளேன். தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என, இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பி உள்ளோம்.பண பட்டுவாடாவை, ஆதாரத்துடன் முறையிட்டால் பிடித்து கொடுங்கள் என்கின்றனர். ஏன் பறக்கும் படையினர் அவர்களை கைது செய்யவில்லை. சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இத்தேர்தலை உடனே ரத்து செய்ய வேண்டும்.இதுதொடர்பாக கட்சித்தலைமையிடம் ஆலோசித்து தேவைப்பட்டால், கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என்றார்.