| ADDED : ஏப் 01, 2024 06:47 AM
புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டு சாவடிகளில் பணிபுரிபவர்களை தேர்வு செய்வதற்கான இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு முறை குறித்து ஆலோசனை நடந்தது.புதுச்சேரியில் வரும் 19ம் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. அதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் 739, காரைக்காலில் 164, மாகில் 31, ஏனாம் 33 என மொத்தம் 967 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில், புதுச்சேரில் 739 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிவர்களை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட தற்செயல் கலப்பு முறை பற்றி கடந்த 17ம் தேதி நடந்தது.அதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு முறை குறித்து, ஆலோசனை கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலையில் நேற்று நடந்தது. அதில் பொது பார்வையாளர் பியுஷ் சிங்லா, போலீஸ் பார்வையாளர் அமர்தீப் சிங் ராய், செலவின பார்வையாளர்கள் முகமது மன்சருல் ஹாசன், லட்சுமிகாந்தா, நோடல் அதிகாரி சுகாதகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், தற்செயல் கலப்பு முறையில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கும் பயிற்சி வகுப்பு வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 8 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கீழ் 16 மையங்களில் நடக்கிறது. அதில், அனைத்து ஓட்டுச்சாவடி அதிகாரிகளும் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்வது கட்டாயமாகும்.இதனை தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களான, லாஸ்பேட்டை மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டு எண்ணும் அறைகள் முன்னேற்பாடுகள் பாதுகாப்பு குறித்து தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.