| ADDED : ஜூன் 01, 2024 04:32 AM
புதுச்சேரி : உப்பளத்தில் தரமற்ற சாலை போடப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.உப்பளம் அம்பேத்கர் சாலையை கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்ட அவர், கூறியதாவது:உப்பளம் அம்பேத்கர் சாலை தரமற்றதாக போடப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி இரவு நேரத்தில் சாலை போடும் போது அரசு துறையின் எந்த அதிகாரியும் அங்கு கண்காணிப்பில் இல்லை. ஒப்பந்ததாரர் சாலையை முக்கால் ஜல்லியுடன் போதிய தார் கலக்காமல் போட்டுள்ளார்.மறுநாள் காலை அவ்வழியே சென்ற 4 சக்கர வாகனங்களால் சாலை பெயர்ந்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் பலர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகினர். பொதுமக்களின் எதிர்ப்பால் மறுநாள் சாலை ஒப்பந்ததாரர் சரி செய்துள்ளார். 5 செ.மீ., உயரத்திற்கு தார் சாலை போடுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிரதான சாலையான அம்பேத்கர் சாலையில் 5 செ.மீ., உயரத்திற்கு தார் சாலை அமைப்பது ஓராண்டிற்கு கூட தாங்காது. குறிப்பிட்ட உயரத்திற்கு சாலை போடப்படுகிறதா என்பதை கூட பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் கண்காணிப்பதில்லை.இந்த தார் சாலை போடும் பணியில் நடைபெற்று உள்ள முறைகேடுகளை பொதுப்பணித்துறையின் முதன்மை அதிகாரி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதன் மீது உரிய நடவடிக்கையை அரசும், பொதுப்பணித் துறை அமைச்சரும் எடுக்க வேண்டும். தற்போது நடைபெறும் சாலை பணியை முதன்மை அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.