புதுச்சேரி: புதுச்சேரியில் இந்தாண்டு தீபாவளிக்கு தற்காலிக பட்டாசுக்கடை வைக்க, விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகளில், தற்காலிக பட்டாசுக்கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள், பேட்டையன் சத்திரம் வழுதாவூர் சாலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட், 14,ம் தேதிக்குள் அலுவலக நேரங்களில் விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், பட்டாசு விற்பனை செய்ய போகும் இடத்தின் வரைபடம் மற்றும் வரைபடத்தில் கடையில் பட்டாசு வைத்துக்கொள்ளும் அளவு, கடைக்கு செல்வதற்குரிய வழி, சுற்றி உள்ள சாலைகள், கடையை சுற்றி, 15 மீட்டர் சுற்றளவில் உள்ள மற்ற கடைகள் பற்றி குறிப்பிட வேண்டும். மேலும் இடத்தின் உரிமை தொடர்பான பத்திரங்கள், சொந்த இடமாக, கடையாக இருப்பின் அதற்கு உண்டான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், வாடகை இடமாக, கடையாக இருப்பின் வாடகை பத்திரம், பட்டாசுக்கடை வைக்க உரிமையாளரின் ஆட்சேபனை இல்லை என்ற நோட்டரி பத்திரம், மின் ரசீது, தண்ணீர் ரசீது, முகவரி மற்றும் அடையான சான்றுகள் ஆகிய ஆவணங்களின் நகல்கள், மூன்று பிரதிகள், விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.வரும், ஆகஸ்ட், 14,ம் தேதி மாலை 5:30 மணிக்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே, இந்தாண்டு தீபாவளிக்காக பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.