| ADDED : மே 25, 2024 03:55 AM
புதுச்சேரி: ஹஜ் செல்லும் பயணிகளுக்கு நிறுத்தப்பட்ட மானியத்தொகை விரைவில் வழங்கப்படும் என ஹஜ்கமிட்டி நிர்வாகிகளிடம் முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.புதுச்சேரி மாநிலத்தில் இந்தாண்டு புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி மற்றும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.மாநில அரசின் ஹஜ்கமிட்டி தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார்.ஹஜ்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து காரைக்கால் மெய்தீன் பள்ளி ஜாமீ ஆ மஸ்ஜீத்,இமாம் ரியாஸ் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் மாநில ஹஜ்கமிட்டி செயலாளர் சுல்தான் அப்துல்காதர், உறுப்பினர்கள் ஜெஹபர், நிஜார் அஹமத், சலாவுதீன் காரைக்கால் வக்பு நிர்வாக சபை செயலாளர் செல்லாப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முதல்வருடன் சந்திப்பு:ஹஜ்கமிட்டி நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து பேசினர். அப்போது புதுச்சேரி மாநிலத்திலிருந்து அரசு சார்பில் தேர்வாகி செல்லும் ஹஜ் பயணிகளுக்கு அரசு சார்பில் வழங்கி வந்த மானியம் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. அதை இந்தாண்டு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற முதல்வர் ரங்கசாமி,தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்பு ஹஜ் செல்லும் பயணிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என உறுதியளித்தார். சந்திப்பின்போது அரசு கொறடா ஆறுமுகம் உடனிருந்தார்.