| ADDED : மே 18, 2024 06:30 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் குப்பையை அள்ளாமல் பில் வைத்த நிறுவனத்திற்கு பணம் வழங்கும் கோப்பு நிறுத்தி வைத்துள்ளதாக கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.புதுச்சேரியில் நகர பகுதி மற்றும் கிராமம் என இரு தனியார் நிறுவனங்கள் மூலம் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில், குப்பை அள்ளும் திட்டத்தில் கூறியுள்ளபடி, அனைத்து இடங்களில் குப்பைகள் அகற்றப் படுவதில்லை. ஏராளமான நகர்களில் இன்றும் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் குப்பைகள் அகற்றாமலே, அகற்றியதாக மோசடி அதிக அளவில் நடக்கிறது.இந்நிலையில், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த விழாவில் பங்கேற்ற கவர்னர் ராதாகிருஷ்ணன், தன்னிடம் வந்த குப்பை அகற்றும் நிறுவனத்திற்கான பணம் வழங்கும் கோப்பில் கையெழுத்திடாமல் வைத்துள்ளதாக தெரிவித்தார்.அவர் பேசுகையில், 'புதுச்சேரியை ஒரு முறை சுற்றி வாருங்கள். ஏதேனும் ஒரு தெரு குப்பை இன்றி சுத்தமாக இருந்தால், நான் அந்த கோப்பிற்கு அனுமதி அளிக்கிறேன். புதுச்சேரி முழுதும் வீதிகள் தோறும் குப்பைகள் அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு குப்பைகள் அகற்றப்படுகிறதா? அதனால் தான் கோப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என, கூறினார்.