| ADDED : ஆக 18, 2024 11:21 PM
புதுச்சேரி: கரும்புக்கு அதிகம் பிடித்தம் செய்த சோலை கழிவுக்கான பணத்தை ஆலை நிர்வாகம் திருப்பி தரும் முடிவுக்கு உதவிய முதல்வர், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது.புதுச்சேரி விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கை;அரியூரில் இயங்கி வந்த ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை, லிங்கா ரெட்டிப்பாளையம் ஆலை பல ஆண்டுகள் இயங்கவில்லை. புதுச்சேரியில் பயிரிடப்பட்ட கரும்பு ஈ.ஐ.டி., முண்டியம்பாக்கம் ஆலைக்கு கொண்டு செல்ல புதுச்சேரி கரும்பு ஆணையர் ஆணையிட்டார்.கடந்த 2021-22ம் ஆண்டு நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை சோலை கழிவு 1 சதவீத்தில் இருந்து 8 சதவீதம் வரை பிடித்தம் செய்தது. கரும்பு சட்டத்தில் 1 சதவீதம் மட்டுமே பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக கழிவு பிடித்தம் செய்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.கரும்பு ஆணையர் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். முதல்வர் ரங்கசாமி, கரும்பு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டதுடன், லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை இயங்கும் வரை புதுச்சேரி பகுதியை பொதுப் பகுதியாக அறிவித்தார்.அதன் பிறகு தமிழகத்தின் பல சர்க்கரை ஆலைக்கு புதுச்சேரி கரும்பு விவசாயிகள் கரும்பு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், ஈ.ஐ.டி., பாரி ஆலை இனி கரும்பு சட்டப்படி 1 சதவீத சோலை கழிவு பிடித்தம் செய்யப்படும். 1 சதவீத்திற்கும் அதிகமாக பிடித்தம் செய்த சோலை கழிவுக்கான பணம் விவசாயிகளுக்கு திருப்பி அனுப்பி வருகிறோம் என, அறிவித்துள்ளது.இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இதற்கு காரணமான முதல்வர், வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என, தெரிவிக்கப்பட்டுள்ளது.