| ADDED : ஜூன் 02, 2024 04:59 AM
புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலைக்கு பின்புறம்,அலைகளுக்கு மத்தியில் வெளியே தெரியும் இரும்பு துாண்களை பார்ப்பவர்கள் மனதில் அவை என்ன என்பது குறித்து கேள்விகள் எழும்.கடலில் எட்டி பார்க்கும் அந்த இரும்பு துாண்கள், பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கடல் பாலத்தின் சாட்சியாகவும், புதுச்சேரி பழைய துறைமுகத்தின் வரலாற்று எச்சமாகவும் திகழ்கின்றன.பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட துறைமுகத்துக்காக 192 மீட்டர் நீளத்துக்கு கடல் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. கடந்த 1864ம் ஆண்டு துவங்கிய இந்த பணிகள் 1866ல் முடிக்கப்பட்டது. 1866ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த கடல் பாலம், வாராவதி என்ற பெயரில் பயன்பாட்டிற்கு வந்தது.இந்த துறைமுகத்தின் தற்போது காந்தி சிலை இருக்கும் பகுதி மூன்றாம் நெப்போலியன் சதுக்கம் என்று அப்போது அழைக்கப்பட்டது. பின், பிரான்சில் குடியரசு மலர்ந்தபோது குடியரசு சதுக்கம் என்று அழைக்கப்பட்டுள்ளது.கடந்த 1879ம் ஆண்டு புதுச்சேரிக்கு ரயில் சேவை துவக்கப்பட்ட போது, இந்த துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 1881-82ல், கடல் பாலம் மேலும் 64 மீட்டரும்,1908-09ல் மேலும் 80 மீட்டரும் கடலுக்குள் நீட்டிக்கப்பட்டது. இதன் விளைவாக 336 மீட்டருக்கு கடலை நோக்கி நீளமடைந்த கடல் பாலம் சரக்குகளை கையாளுவதை எளிமையாக்கி பிரெஞ்சுக்காரர்களின் வாணிபத்திற்கு உதவியது.இந்நிலையில், 1952ல்வீசிய புயல் கடல் பாலத்தை சின்னபின்னமாக்கியது. இயற்கை பேரிடர்களும் கடல் பாலத்தை உருக்குலைந்தன. கடல் பாலத்தின் இரும்பு துாண்தான் தற்போது கடலுக்கு வெளியே தெரிந்து பிரெஞ்சுக்காரர்களின் துறைமுகத்தை நினைவுபடுத்துகிறது.