| ADDED : ஏப் 12, 2024 04:28 AM
பாகூர் : பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுார் மாவட்டம் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நவீன் மேனன் 23; இவர் பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பத்தில் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 9ம் தேதி இரவு பணியில் இருந்த போது, குருவிநத்தம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்த பள்ளி கார்த்தி என்பவர், தனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டுள்ளார். அதற்கான பணத்தை பேடிஎம் மூலமாக அனுப்பி உள்ளார். ஆனால், அந்த பணம் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் வங்கி கணக்கில் வரவில்லை. இது குறித்து நவீன்மேனன், கேட்டபோது, அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், பள்ளி கார்த்தி வீட்டுக்கு சென்று விட்ட நிலையில், அன்று இரவு அவரது சகோதரர் அருணாச்சலம் (எ) அண்ணாமலை மற்றும் அவரது நண்பர் ஜெகன் ஆகியோர் பெட்ரோல் பங்கிற்கு சென்று, நவீன் மேனனிடம், என் அண்ணனிடமே பொய் சொல்லி ஏமாற்றுகிறாயா என கூறி தாக்கி உள்ளார். அப்போது அவருடன் வந்த ஜெகன் கத்தியால், நவீன் மேனன் கையில் குத்தி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதில், காயமடைந்த அவர் பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் வழக்குப் பதிந்து அண்ணாமலை, ஜெகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.