| ADDED : ஜூலை 14, 2024 05:34 AM
புதுச்சேரி, : கட்ட பஞ்சாயத்துக்களை ஒழிக்க வேண்டும் என்றால் நீதிமன்ற வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என, கவர்னர் ராதாகிருஷ்ணன் கூறினார். புதுச்சேரியில், புதிய நீதிமன்றங்கள் துவக்க விழாவில் அவர், பேசியதாவது;காலதாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி என எல்லோருடைய மனதிலும் பதிந்து இருக்கிறது. இதற்கு விடிவு காண வேண்டும் என்றால் அது வழக்கறிஞர்கள் கையில் உள்ளது.இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள அரசு அதிகாரத்தில் உள்ளவர்களின் நியாயத்திற்கு புறம்பான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். நீதிமன்றங்களில் மட்டும் தான் அதை தடுத்து நிறுத்த முடியும்.சாதாரண மனிதனுக்கு இருக்கிற மிகப்பெரிய பாதுகாப்பு நீதிமன்றங்கள். யார் ஆட்சி இருந்தாலும், வழக்காடு மன்றங்கள் தனி நபரின் உரிமையை பாதுகாக்க இருக்க வேண்டும்.நம்மை சுற்றி கட்ட பஞ்சாயத்துகள் பெருகி கொண்டே செல்கிறது. ரவுடிகள் நீதிபதிகளை போல செயல்படுகிறார்கள். கட்ட பஞ்சாயத்துக்களை ஒழிக்க வேண்டும் என்றால் நீதிமன்ற வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும். சாமானிய மக்கள் விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் கட்ட பஞ்சாயத்துகாரர்களை அணுகுகிறார்கள். நீதிமன்றங்களில் விரைவாக தீர்வு கிடைப்பது தான் இதற்கு மாற்றாக இருக்கும்.நாடு வளர்ச்சி அடைந்து வருவதை தக்க வைத்து கொள்ள மூன்று மாற்றங்கள் தவிர்க்க இயலாது. ஒன்று பொருளாதார சீர்த்திருத்தம், 2வது நீதித்துறை சீர்திருத்தம், 3வது தேர்தல் சீர்த்திருத்தம். இந்த மூன்றும் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் விதமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.சாமானியர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டுமானால், மாற்றங்களில் இருக்கின்ற தவறுகளை சுட்டி காட்டு பவர்களாக இருக்க வேண்டும். எல்லாவற் றிற்கும் மேலாக நீதிமன்றங்களுக்குத் தான் சாமானிய மக்களின் உரிமைகளை கட்டிக் காக்கின்ற அதிகாரமும் பொறுப்பும் இருக்கிறது. நீதிமன்றங்கள் மகத்தான வாதங்களை எடுத்து வைக்கின்ற இடமாக, மிகச் சிறந்த தீர்ப்புகள் எழுதப்படுகின்ற மன்றமாக இருக்க வேண்டும். புதுச்சேரி நீதிமன்றங்கள் தேசத்திற்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர், பேசினார்.