| ADDED : ஜூன் 02, 2024 05:06 AM
புதுச்சேரி: உப்பளம் அம்பேத்கர் சாலையை அமைச்சர் லட்சுமிநாராயணன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலை மத்திய கோட்டம் சார்பில் உப்பளம் அம்பேத்கர் சாலை பணி நடக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை சேதமானது. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை பொறியாளர் தீனதயாளன், ஒப்பந்தாரர்களுடன் சாலை பணியை ஆய்வு செய்தார்.அப்போது, சாலை புதிதாக அமைத்த பின்பு 8 மணி நேரம் எந்த வாகனமும் செல்லாமல் இருந்தால் சாலை உறுதியுடனும், தரத்துடன் இருக்கும். இச்சாலையில் தமிழக அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. அங்கு அதிக பஸ்கள் சென்று வந்ததால், புதிய சாலை சேதம் அடைத்துவிட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.சாலை அமைக்கும் பணியில் முதல் லேயர் 5 செ.மீ., கனமும், 2வது லேயர் 3 செ.மீ., கனமும் அமைக்கப்பட உள்ளது. இதில் முதலில் 5 செ.மீ., லேயர் பணி மட்டுமே தற்போது அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து 3 ஆண்டிற்கு அதே ஒப்பந்தாரர் ஏற்படும் சேதங்களை பழுதுநீக்கி பராமரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.எனவே, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து சாலையை சிறப்பாக அமைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். தரக் கட்டுப்பாட்டினை சோதனை செய்து அதற்கான அறிக்கைய அளிக்க வேண்டும். எந்தவித சமரசமும் இன்றி பணிகளை சரியான காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு தலைமை பொறியாளர் அறிவுறுத்தினார்.புதிய சாலையில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை. புதுச்சேரியில் இதுவரை 2 கோடிக்கு மேல் நடந்த சாலை பணிகளில் தரச்சான்றிதழ் பெறப்பட்டு வருகிறது. ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆய்வின்போது, செயற்பொறியாளர் சுந்தரராஜ், சுந்தரமூர்த்தி, ராதாக்கிருஷ்ணன், உமாபதி உடனிருந்தனர்.