| ADDED : மார் 25, 2024 05:11 AM
காரைக்கால்,: காரைக்காலில் ரயில் நிலையத்தில் நடைபயணம் மேற்கொண்ட தலைமை ஆசிரியரிடம் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால், சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி தனலெட்சுமி, 54; அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். இவர் கடந்த 7ம் தேதி தோழி ஜெயந்தியுடன் ரயில் நிலையத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், தனலெட்சுமியின் முகத்தில் கையில் வைத்திருந்த திரவத்தை பூசி, அவர் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். அதன் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய்.இதுகுறித்த புகாரின் பேரில், நகர இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி., கேமராவில் பதிவான காட்சிகள் உதவியுடன் போலீசார் தீவிர விசாரித்தனர். அதில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த மனோஜ், 46, என்பவர் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஏழு சவரன் செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.