உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திடீரென தீப்பிடித்து எரிந்த மாங்குரோவ் காடு வீராம்பட்டினத்தில் பரபரப்பு

திடீரென தீப்பிடித்து எரிந்த மாங்குரோவ் காடு வீராம்பட்டினத்தில் பரபரப்பு

புதுச்சேரி: வீராம்பட்டினம் முகத்துவாரம் அருகே மாங்குரோவ் காட்டில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சுனாமி பேரழிவின்போது, கடற்கரையில் வளர்ந்திருந்த அடர்ந்த மாங்குரோவ் காடுகள் தடுப்புச் சுவராக நின்று சுனாமி அலைகளை தடுத்து, கரையோரம் வாழும் மக்களை காத்தன. இதனால், சுனாமிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரி கடற்கரையோரம் மாங்குரோவ் காடுகள் வளர்க்க அரசுகள் பரிந்துரை செய்தது.இதையடுத்து, தேங்காய்த்திட்டு துறைமுக பகுதியில் ஏற்கனவே இருந்த மாங்குரோவ் காடுகளுடன், புதிதாக பல இடங்களில் மாங்குரோவ் செடிகள் நட்டு வளர்க்கப்பட்டன. அவை சிலரது சுயநலத்தால் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தேங்காய்த்திட்டு துறைமுகத்தின் தெற்கு பக்கம் (வீராம்பட்டினம்) கரையோரம் மாங்குரோவ் மரங்களுடன், கருவேல மரங்களும் சேர்ந்து வளர்ந்து இருந்தது. இப்பகுதியில் தனியார் படகு குழாம் அமைய உள்ளது.இதற்கிடையில், அரசு இடத்தில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் மாங்குரோவ் மரங்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் யாரோ அழித்து ஒரே இடத்தில் குவித்து வைத்து இருந்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு, வெட்டி குவித்து வைக்கப்பட்டு மரங்கள் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதில் அருகில் இருந்த கருவவேல மரங்களும் மற்றும் மாங்குரோவ் மரங்களும் தீயில் கருகியது.புதுச்சேரி மற்றும் கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அதிகாரி மனோகர், முன்னணி தீயணைப்பு வீரர் செல்வக்குமார் தலைமையில், 2 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் அருகே கரையோரம் பல ஏக்கரில் இருந்த மாங்குரோவ் காடுகள் ஏற்கனவே அழிந்து விட்டது. தற்போது, வீராம்பட்டினம் முகத்துவார பகுதியில் படகு குழாம் அமைக்கும் இடத்தின் அருகே திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மரங்கள் அல்லது காய்ந்த சருகுகள் தானாக எரிய வாய்ப்பு இல்லை. எனவே, இதுகுறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

தீவிர விசாரணை தேவை

அரியாங்குப்பம் போலீசார் கூறுகையில் 'மாங்குரோவ் மற்றும் அடர்ந்த கருவேல மரங்கள் உள்ள பகுதியில் காய்ந்த இலைகள் அதிகம் இருந்தது. குடிபோதையில் அங்கு சென்ற நபர்கள் புகை பிடிக்கும்போது தீ வைத்து இருக்கலாம்' என தெரிவித்தனர்.சமீபத்தில் புதுச்சேரியில் லேசான மழை பெய்தது. மேலும், அடிக்கடி சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால், மாங்குரோவ் மற்றும் கருவேல மரங்கள், செடி கொடிகள் பச்சை பசேல் என இருந்தது. அவை திடீரென தீப்பற்றி எரிந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாங்குரோவ் காட்டிற்குதீ வைப்பு?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ