உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முடிவானது : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

 எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முடிவானது : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டது. ஓரிரு நாட்களில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகிறது.அகில இந்திய மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலங்களை பொருத்தவரை ஆகஸ்ட் 21ம் தேதி துவங்கி 29ம் தேதிக்குள் முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும். அத்துடன், கல்லுாரியில் இணைந்த மாணவர்களின் பட்டியலை செப்டம்பர் 6மற்றும் 7ம் தேதிக்குள் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.ஆனால், புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படாமல் இருந்ததால், மருத்துவ கலந்தாய்விற்கு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக, கடந்த 17 ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இச்சூழலில், நேற்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் அரசு ஒதுக்கீடு இடங்கள் இறுதி செய்வதற்கான கூட்டம் நடந்தது.சட்டசபை வளாகத்தில் நடந்த கூட்டத்தில் பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லுாரி பிரதிநிதிகள், சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி பேசும்போது, மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே அனைத்து மாணவர்களின் கனவாக உள்ளது. கூடுதலாக மருத்துவ சீட்டுகளை பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே தனியார் மருத்துவ கல்லுாரிகள் 50 சதவீத மருத்துவ சீட்டுகளை அரசு ஒதுக்கீட்டாக தர வேண்டும் என்றார்.இதற்கு நிர்வாக செலவுகளை சுட்டிக்காட்டிய தனியார் மருத்துவ கல்லுாரிகள், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களை அளித்தால் கல்லுாரிகளை நடத்துவதே கடினமாக இருக்கும் என்று கருத்துகளை முன் வைத்தனர். தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முதல்வர் தலைமையில் இறுதி செய்யப்பட்டன. அரசாணை வெளியிடுதற்காக சுகாதாரத்துறை வாயிலாக துறை செயலருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

எவ்வளவு

கடந்த 2023-24 ம் ஆண்டில் மூன்று தனியார் கல்லுாரிகளில் 650 எம்.பி.பி.எஸ்., இடங்களில் 239 எம்.பி.பி.எஸ்.,இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டது. இந்தாண்டு இரண்டு தனியார் மருத்துவ கல்லுாரிகள் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தலா ஒரு எம்.பி.பி.எஸ்., சீட்டினை கூடுதலாக தர முன் வந்தன. அதே நேரத்தில் ஒரு மருத்துவ கல்லுாரி ஒரு எம்.பி.பி.எஸ்., சீட்டினை குறைத்து தருவதாக தெரிவித்தது. ஏற்கனவே கோர்ட் உத்தரவின்படி கூடுதலாக சீட்டுகளை தந்துள்ளோம் என்ற வாதத்தையும் அக்கல்லுாரி முன் வைத்தது. எனவே இந்தாண்டு 240 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக தர வாய்ப்பு உள்ளது. இது குறித்த முறைப்படியான அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகிறது.

சென்டாக் கவுன்சிலிங் எப்போது

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதற்கான ஆட்சேபனைகள் நேற்றுவரை பெற்று, முதற்கட்ட கலந்தாய்விற்கும் ரெடியாக உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வெளியானதும், உடனடியாகவே மருத்துவ மாணவர்களுக்கு சீட்கள் ஒதுக்கப்பட்டு விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி