| ADDED : ஜூன் 26, 2024 07:36 AM
புதுச்சேரி : மின்துறையில் கட்டுமான உதவியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட, 750 காலிபணியிடங்களை பூர்த்தி செய்ய நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் கவர்னர் மற்றும் முதல்வரிடம் அளித்த மனு;புதுச்சேரி மின்துறையில் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது,50 சதவீத பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 50 வயதை கடந்து,பணி செய்து கொண்டிருக்கின்றனர்.உடல் நலம் பாதிக்கப்படும்ஊழியர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்கின்றனர்.இதனால் குறைந்த ஊழியர்கள் இரவு, பகலாக பணி செய்கின்றனர்.இதன் காரணமாக கவனச்சிதறலால்,மின் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.சமீபத்தில் முத்திரையபாளையம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பிரிவை சேர்ந்த இரு மின் ஊழியர்கள் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை, சாரம் பகுதியை சேர்ந்த மின் துறை ஊழியர் ஒருவர் மின் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணம் மின்துறையில் நிலவும் ஆள்பற்றாக்குறை தான்.மின்துறை ஊழியர்கள் பணிசுமை காரணமாக விருப்ப ஓய்வு கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மின்துறையில் காலியாக உள்ள, 180 கட்டுமான உதவியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட, 750 பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.