உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொகுதியில் செல்வாக்கு இல்லையா? சட்டசபை தேர்தலில் சீட் கிடையாது!

தொகுதியில் செல்வாக்கு இல்லையா? சட்டசபை தேர்தலில் சீட் கிடையாது!

பு துச்சேரியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், 'சர்வே ரிப்போர்ட்' அடிப்படையில் சீட் தர காங்., தலைமை முடிவு செய்துள்ளதால், 'மாஜி'க்கள் மற்றும் காங்., பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பத்து ஆண்டுகளுக்கு முன், நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் காங்., ஆட்சி நடந்தது. அதற்கு பின், ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் தோல்வியை சந்தித்ததால், பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை பறி கொடுத்தது.குறிப்பாக, காங்., கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட புதுச்சேரியிலும், கடந்த சட்டசபை தேர்தலில் கட்சி படுதோல்வியை தழுவியது. இதனால், அதிர்ச்சி அடைந்த காங்., தலைமை தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய துவங்கியது.மேலிட தலைவர்களின் சிபாரிசின் பேரில், ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களும், உள்ளூர் பிரமுகர்களும் சீட் பெற்றதும், ஆனால் அவர்களுக்கு சொந்த தொகுதியிலேயே செல்வாக்கு இல்லாததால் பலர் தோல்வியை தழுவியதும் தெரிய வந்தது.

சர்வே ரிப்போர்ட்

இதன் காரணமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், வெற்றி வேட்பாளர்கள் குறித்து சர்வே எடுத்து, அதனடிப்படையில் சீட் தர காங்., மேலிடம் முடிவு செய்தது. இதற்கு கை மேல் பலன் கிடைத்தது.கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை காங்., கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தங்களது தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதா என்பதை சர்வே செய்து சீட் வழங்கப்பட்டது. இதில், மூத்த நிர்வாகிகளுக்கும் விதி விலக்கில்லை.

சமரசம் கிடையாது

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரசின் சர்வே அறிக்கையில், 41 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதியில் செல்வாக்கு இல்லை என்பது தெரிய வந்தது. இதை, அப்போதைய காங்., முதல்வர் ஏற்காமல், 'அனைவரையும் வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது' என கட்சி தலைமைக்கு உறுதி அளித்து, சீட் பெற்று தந்தார். ஆனால், அனைவரும்தோற்றனர்.இதன் காரணமாக, எதிர்காலத்தில் சர்வே அறிக்கையை முழுமையாக பின்பற்றி சீட் தருவது என்றும், அதில் சமரசம் கிடையாது என்றும் காங்., தலைமை முடிவு செய்துள்ளது.

புதுச்சேரிக்கு குறி

இந்நிலையில், காங்., தலைமையின் கவனம் தற்போது புதுச்சேரியின் பக்கம் திரும்பி உள்ளது. இங்கு இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அக்கட்சியின் தலைமை, அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதன்படி, முதல்கட்ட சர்வே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியிலும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தொகுதியில் உள்ள செல்வாக்கு, செய்துள்ள மக்கள் பணிகள், வெற்றி வாய்ப்பு குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்தா தரவும் அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பங்கீட்டில் கறார்

இதுமட்டுமல்லாமல், கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்., கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள பல தொகுதிகள் தி.மு.க.,வுக்கு தாரை வார்க்கப்பட்டது. வெற்றி வாய்ப்பே இல்லாத, குறிப்பாக வேட்பாளர்கூட இல்லாத ஏனாம் போன்ற தொகுதிகள் காங்., கட்சிக்கு பெறப்பட்டதால் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது.நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், கடந்த காலங்களைபோல, 20:10 என்ற அடிப்படையில் தொகுதிகளை பெறவும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வலியுறுத்தி பெறவும் காங்., தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.காங்., தலைமையின் அதிரடி முடிவால், உள்ளூரை சேர்ந்த அக்கட்சியின் 'மாஜி'க்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை