| ADDED : மார் 28, 2024 04:30 AM
புதுச்சேரி : நெல்லித்தோப்பு சிக்னல் ப்ரிலெப்ட் பாதையில் அதிவேகமாக முந்தி சென்ற தனியார் பஸ், பைக் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 42; உருளையன்பேட்டை போலீஸ் நிலைய கான்ஸ்டபிள். நேற்று மதியம் வேலைக்கு செல்வதிற்காக வீட்டில் இருந்து தனது பைக்கில் நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் இருந்து சுப்பையா சிக்னல் நோக்கி சென்றார். சிக்னல் அருகே சென்றபோது, மூர்த்திகுப்பத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பீ .ஒய்.,01-பி.ஒய்., 2333 என்ற எண்ணுடைய தனியார் பஸ், சிக்னலில் பிரி லெட் பாதை வழியாக அதிவேகமாக முந்திச்சென்றது.அப்போது தெய்வசிகாமணி பைக் மீது மோதியது. இதில் கிழே விழுந்த தெய்வசிகாமணி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. பொதுமக்கள் கூச்சலிட்டதால் பஸ் டிரைவர் கூடப்பாக்கம், பிரதீபன் பஸ்சை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். படுகாயமடைந்த தெய்வசிகாமணியை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மார்பு எலும்பு, கை. கால்கள் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் தெய்வசிகாமணி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து பஸ்சை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.