| ADDED : ஆக 22, 2024 02:05 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உழவர்கரை நகராட்சி மற்றும் நகரமைப்பு குழு அலுவலகம் எதிரில், போராட்டத்திற்கு கழகத்தின் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜன், சேர்மன் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில நிர்வாகிகள், அணித்தலைவர்கள், மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி கோஷமிட்டு சென்று உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், 'புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், மக்களின் அடிப்படை அதிகாரம் முடக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அதிகார அமைப்பை புதுச்சேரியில் முன்னாள் மற்றும் தற்போதைய முதல்வர் ஆகியோர் முடக்கி வைத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கான வேலையை துவங்காவிட்டால், அதை நடத்த புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகம் கோர்ட்டுக்கு செல்லும்' என்றார்.