| ADDED : ஏப் 23, 2024 05:01 AM
புதுச்சேரி, : பி.ஆர்.டி.சி. பஸ்சில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரையும், டைம் கீப்பரையும் தாக்கிய வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 1:30 மணிக்கு பி.ஆர்.டி.சி. ஏ.சி. வால்வோ பஸ் வந்து நின்றது. டிரைவர் சீட்டிற்கு பின்புறம் உள்ள வி.ஐ.பி., சீட் இரண்டை , டிரைவர் சரவணன் துண்டு போட்டு வைத்திருந்தார். பஸ்சில் குடிபோதையில் ஏறிய வாலிபர், எதற்காக துண்டுபோட்டு சீட் பிடித்து வைத்துள்ளனர் என கேட்டு தகராறு செய்தார். வி.ஐ.பி. சீட் என தெரிவிக்கப்பட்டது. நானும் பணம் கொடுத்து தான் செல்கிறேன். எதற்காக சீட்டு பிடித்துள்ளனர் என மீண்டும் தகராறு செய்து, டிரைவர் சரவணனை தாக்கியதுடன் தடுக்க வந்த டைம் கீப்பர் அருள் என்பவரையும் தாக்கினார். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் வாலிபரை பிடித்து சென்றனர். காயமடைந்த டிரைவர் சரவணன், அருள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த தகராறால், மதியம் 1:30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏ.சி. வால்வோ பஸ் ரத்து செய்யப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். பஸ் டெப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டது.