புதுச்சேரியை ஆட்சி செய்த பிரஞ்சுக்காரர்கள், குருசுக்குப்பம் ஓயிட் டவுன் இணையும் இடத்தில் கடற்கரையோரம், கடந்த 1916ம் ஆண்டு, சாராய ஆலையை அமைத்தனர். ஆலையில் கரும்பு சர்க்கரை பாகில் இருந்து சாராயம், விஸ்கி தயாரிக்கப்பட்டது. ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் இங்கிருந்து சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆலை கடந்த 1997ம் ஆண்டு மூடப்பட்டது. மூடப்பட்ட சாராய ஆலையை இடித்துவிட்டு, அங்கு மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் மூலம் ரூ. 20.7 கோடி செலவில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி, திறந்தவெளி ஆம்பி தியேட்டர், அருங்காட்சியகம் உள்ளிட்டவை கொண்ட கலாசார மையம் கட்டும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், துவங்கியது. கீழ் தளத்தில் 32 ஆயிரம் சதுர அடியில் ஆடிடோரியம், வி.ஐ.பி.சூட்., டிஜிட்டல் மியூசியம், கண்காட்சி அறையும், முதல் தளத்தில் கடல் அழகை ரசிக்கும் வகையில் 14 தங்கும் அறைகள், 2வது தளத்தில் யோகா, உடற்பயிற்சி கூடம், சமையல் அறைகள் அமைக்கப்பட்டது.கட்டடம் கட்டி முடித்தும் முழுமை பெறாததால் திறப்பு விழா காண முடியாமல் பூட்டி வைத்துள்ளனர். கவர்னர் மாளிகை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலைக்கு சென்று விட்டது. கவர்னர் மாளிகை கட்டடத்தை புனரமைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், கடற்கரையோரம் உள்ள கலாசார மைய கட்டடத்தை கவர்னர் மாளிகையாக மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எலக்ட்ரிக் ஒயரிங்
கலாச்சார மையத்தின் திட்ட மதிப்பில் ரூ. 13 கோடிக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கியது. இதில், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக டிஜிட்டல் மியூசியம் கட்டுவதிற்கு ரூ. 7 கோடிக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் எலக்ட்ரிக்கல் ஒயரிங் வேலைகளை செய்ய பொதுப்பணித்துறை திட்டமிட்டு இருந்தது. 2வது தொகை கிடைக்காததால், என்ன செய்வது என தெரியாமல் அதிகாரிகள் திகைத்தனர். எலக்ட்ரிக்கல் ஒயரிங் வேலைக்கு மீண்டும் ஒரு டெண்டர் விட்டு அதன் மூலம் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
மறுபரிசீலனை தேவை
சுற்றுலா வளர்ச்சிக்காக திட்டமிட்டு கலாசார மையம் கட்டப்பட்டது. அதில் சுற்றுலா பயணிகளுக்காக ஏராளமான வசதிகள் உள்ளது. இதன் மூலம் மாநில சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும். பாதுகாப்பை கருத்தில் கொண்டு கவர்னர் மாளிகையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சுற்றுலா வளர்ச்சிக்காக கட்டப்பட்ட இடத்திற்கு மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.