| ADDED : ஜூலை 20, 2024 04:51 AM
புதுச்சேரி: ஜிப்மர் செவிலியர் பணியிடம் நிரப்புவதில், 25 சதவீத ஒதுக்கீடுபுதுச்சேரி இளைஞர்களுக்கு தர வேண்டும் என இந்திய கம்யூ., கட்சி வலியுறுத்தி உள்ளது.அக்கட்சியின் மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை;மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில்,தென்னிந்திய அளவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மருத்துவ உதவி பெறுகின்றனர். ஜிப்மர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. காலப்போக்கில் மாநில அரசின் அலட்சியத்தால் கல்வி வேலை வாய்ப்பில் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.ஜிப்மரில் தற்போது 165 செவிலியர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை.ஜிப்மர் மருத்துவமனைக்கு தேர்வாகி வருவோர், சில ஆண்டுகளில் மத்திய அரசின் வேறு மருத்துவமனைக்கு இடமாறுதல் பெற்று சென்று விடுகின்றனர்.இதனால் ஜிப்மரில் தொடர்ந்து செவிலியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் செவிலியர் படிப்பு முடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இதனால் ஜிப்மர் அறிவித்துள்ள செவிலியர் பணியிடத்தில் 25 சதவீதம் புதுச்சேரிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., புதுச்சேரி மாநிலத்திற்கான இடஒதுக்கீட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.