புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவமனையில், சிறுநீரகத்துறையில் 'குவாண்டா 100 டபள்யூ லேசர்' கருவி, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் செயல்படும், சிறுநீரக அறுவை சிகிச்சை துறை உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை, நோயாளிகளுக்கு வழங்குகிறது. குறிப்பாக, சிறுநீரக கற்கள் பிரச்னை, பெண்கள் சிறுநீர் உபாதைகள், ஆண் மலட்டு தன்மை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, தற்போது 'லேசர்' மூலம் கற்களை உடைக்கும் மற்றும் 'புரோஸ்டேட்' சுரப்பி வீக்கத்தை லேசர் மூலம் அதிக ரத்த சேதமின்றி, அகற்றும் 'குவாண்டா 100 டபள்யூ லேசர்' கருவி, இத்துறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த, 'குவாண்டா 100 டபள்யூ லேசர்' கருவியானது, நேற்று மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேல் தலைமையில், மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி ஷமிமுனிஷா பேகம், குறைதீர்வு அதிகாரி ரவி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் ஆகியோர் முன்னிலையில், துறைத்தலைவர் சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது. இது குறித்து சிறுநீரகத்துறை தலைவர் சுதாகர் கூறியதாவது:இந்த வசதியை பெற, தனியார் மருத்துவமனைகளில், ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இதனால், நோயாளிகளுக்கு மருத்துவமனையில் தங்கும் நாட்கள் வெகுவாக குறைவதுடன், வலி இன்றி விரைவில் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஏதுவாகிறது. இந்த சிகிச்சை முறையை புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற மக்கள் பயன்படுத்தி, நலம் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.