புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் நேற்று கடும் துர்நாற்றம் வீசியதால், விஷவாயு தாக்கமா என்ற பீதி உருவானது. துர்நாற்றம் தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர், 4வது குறுக்கு தெருவில் கடந்த மாதம் 11ம் தேதி, பாதாள சாக்கடை மேன்ஹோல்களில் உருவான விஷவாயு, கழிவறை வழியாக வெளியேறியது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி, 16; செந்தாமரை, 80; அவரது மகள் காமாட்சி, 45; ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் புதுச்சேரி பரபரப்பாக மாறியது. கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் என, அனைவரும் அப்பகுதியில் குவிந்தனர்.புதுநகர் அருகில் கனகன் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர கழிவுநீரை சுத்திகரிக்காததால் விஷவாயு உருவாகி உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.ஆனால், பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுக்கப்பட்ட இடத்தில் வாட்டர் சீல் எனப்படும் எஸ் மற்றும் பி டிராப் பொருத்ததால் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் அறிவித்தனர். புதுநகர் 4 மற்றும் 3வது வீதியில் உள்ள கழிவறைகளுக்கு, பொதுப்பணித்துறை சார்பில் வாட்டர் சீல் எனப்படும் டிராப் இலவசமாக பொருத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக, புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை 4:30 மணி முதல் துர்நாற்றத்தின் அளவு தீவிரமானது. வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதால், புதுநகர், மூகாம்பிகை நகர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் குழந்தைகளுடன் உறவினர் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.சிலர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று கேட்டபோது, மின்தடை ஏற்பட்டதாகவும், ஜெனரேட்டர் இல்லாததால் துர்நாற்றம் வீசுவதாக கூறினர்.துர்நாற்றம் தாங்க முடியாமல் நேற்று இரவு 8:15 மணிக்கு, புதுநகர் பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் பஸ் நிறுத்தம் எதிரில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரவு 9:30 மணியை தாண்டியும் மறியல் போராட்டம் நடந்ததால், சிவசங்கரன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து 10:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.