| ADDED : ஜூன் 15, 2024 05:05 AM
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும் எனஇந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் விஷவாயு தாக்கி மாணவி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்தனர். பாதாள சாக்கடை திட்டம் சரியாக அமைக்காததால், செல்லாம்பாப்பு நகர், கம்பன் நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவு நீர் உட்புகும் நிலையும் இருந்தது. புதுநகரில்கடந்த சில மாதங்களாக துார்நாற்றம் வீசியது. இதுகுறித்து இந்திய கம்யூ., உழவர்கரை தொகுதி குழு சார்பில், கடந்த 2022 டிசம்பர் மாதம் கையெழுத்து இயக்கம் நடத்தி, முதல்வர் ரங்கசாமி மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அப்போது மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால், தற்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் இறந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் வீடுகளில் பெண்டு வைக்காதது தான் காரணம் என்று அதிகாரிகள் சொல்வது குற்றத்தை மூடி மறைக்கும் செயல். புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையின் அனுபவம் மிக்க பொறியாளர்கள்,சுற்றுப்புற சூழல் அதிகாரிகள்,சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட விசாரணை குழு அமைத்து குறைந்த கால அவகாசத்தில் குழு அறிக்கை பெறப்பட்டு, அந்த பகுதியில் ஒட்டுமொத்த சீர்கேடு அடைந்த பாதாள கழிவு நீர் திட்டத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.