| ADDED : ஆக 14, 2024 05:59 AM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர், துணை சபாநாயகருக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால், கோபமடைந்த துணை சபாநாயகர் இனி சபையில் பேச மாட்டேன் என ஆவேசமாக கூறினார்.மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது, துணை சபாநாயகர் ராஜவேலு, தனது தொகுதியான நெட்டப்பாக்கத்தில் பாலம் அமைப்பது தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பினார்.அதற்கு சபாநாயகர் செல்வம் அனுமதி தர மறுத்தார். சபை மரபுபடி, துணை சபாநாயகர் பேசக் கூடாது. உங்களது தொகுதி பிரச்னையை மற்ற உறுப்பினர்கள் வைத்து பேச சொல்லுங்கள் என கூறினார்.அப்போது துணை சபாநாயகர் ராஜவேலு பேசுகையில், 'நீங்கள் முதல் முறையாக இந்த சபைக்கு வந்துள்ளீர்கள். நான் ஏற்கனவே உங்களுக்கு முன்பே சட்டசபைக்கு வந்து விட்டேன். 5வது முறையாக இந்த சபைக்கு வந்துள்ளேன். சபை மரபுகள் எல்லாம் எனக்கும் தெரியும்' என, கூறினார். இருந்தபோதும், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலுவை பேச வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தினார். இதனால், எரிச்சல் அடைந்த துணை சபாநாயகர் ராஜவேலு, இனி சபையில் நான் பேச மாட்டேன் என ஆவேசமாக கூறி அமர்ந்து விட்டார்.